2016-05-16 17:13:00

மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென திருத்தந்தை வெளியிட்ட செய்தி


மே,16,2016. நம்முடையத் திறமைகளையும், ஞானத்தையும், அனுபவங்களையும் தாராள மனதுடன் வழங்கி, இறைவனின் இரக்கச் செய்தியை மனித குலமனைத்திற்கும் எடுத்துச் செல்லும் மறைபரப்புப் பணியாளர்களாக வாழ அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென செய்தி வெளியிடும் திருத்தந்தை, இவ்வாண்டு, அக்டோபர் 23ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் மறைபரப்புப்பணி ஞாயிறு, 90வது உலக மறைபரப்புப் பணி நாள் என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைபரப்புப்பணியை தன் கட்டளையாகப் பெற்றுள்ளத் திருஅவை, உலகின் ஒவ்வொரு மனிதரும் மீட்படைய வேண்டும், இறைவனின் அன்பை சுவைக்கவேண்டும் என்ற ஆவலில், மக்களை நாடிச் செல்கிறது என்று, இச்செய்தியில் கூறியுள்ளத் திருத்தந்தை, உலகின் இறுதி எல்லைவரை இரக்கத்தை அறிவிக்கவேண்டியது, திருஅவையின் கடமை என்று கூறினார்.

ஏழைகளோடும், தேவையில் இருப்போரோடும், ஒதுக்கப்பட்டோருடனும் தன்னையே அடையாளப்படுத்திக் கொள்ளும் இறைவன், தன் இரக்கத்தை அனைத்து மக்களுக்கும் வழங்குகிறார், ஏனெனில், இரக்கத்தின் உன்னத வெளிப்பாடு, வார்த்தை மனு உருவானதில் இருந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் விளக்கம் அளித்துள்ளார்.

நாம் இயேசுவைப் பின்பற்றி, தூய ஆவியாரின் துணையோடு, தந்தையைப்போல் இரக்கமுள்ளவராக மாறும்போது, நம் வாழ்வு, மற்றவர்களுக்கு வழங்கப்படும் கொடையாக மாறுகின்றது என்று திருத்தந்தையின் செய்தி மேலும் கூறுகிறது.

பிறரன்புப் பணிகள் வழியே நற்செய்தியை அறிவிக்கும் பெண்கள் மற்றும் குடும்பங்கள் குறித்தும், தன் செய்தியில் பாராட்டு தெரிவித்துள்ள திருத்தந்தை, நற்செய்தி பணியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது வரையறையற்ற அன்பைக் கொண்டவர்களாகச் செயல்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

இறைவனின் மீட்பெனும் கொடையை பெறும் உரிமை, ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், ஒவ்வோர் இனத்திற்கும் உள்ளது என்பதையும் மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.