2016-05-14 14:01:00

யூபிலி மறைக்கல்வியுரை : பக்தி, இரக்கப்படுவது போன்றது


மே,14,2016. அன்பு இதயங்களே, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும், சனிக்கிழமை சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரையையும் வழங்கி வருகிறார். உரோம் நகரில் இச்சனிக்கிழமை காலையில் மழை பெய்துகொண்டிருந்ததால், முதலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம் சென்று, அங்கு அமர்ந்திருந்த நோயாளர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று பெய்துகொண்டிருக்கும் மழையினால், இந்தச் சந்திப்பு, இரு இடங்களில் இடம்பெறுகின்றது. ஆயினும், இதயத்திலும், செபத்திலும் நாம் ஒன்றித்திருக்கிறோம். வளாகத்தில் நடைபெறும் மறைக்கல்வியுரையை இங்குள்ள பெரிய திரைகளில் பாருங்கள். திருஅவைக்காக, எனக்காக, நம் எல்லாருக்காவும் செபியுங்கள். இவ்வாறு, நாம் செபத்தில் மகிழ்ந்திருப்போம். நாம் எல்லாரும் இணைந்து அன்னை மரியாவிடம் இப்போது செபிப்போம். துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். நம் ஆண்டவர் இயேசு மிகவும் நல்லவர். நன்றி என இரு முறைகள் சொல்லி, நோயாளர்களை ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்குத் திறந்த காரில் சென்று, மக்கள் மத்தியில் வலம் வந்து தனது மறைக்கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள், குடைகள் மற்றும், மழைக்கான உடைகளுடன், அமர்ந்து திருத்தந்தையின் உரையைக் கேட்டனர்.   

அன்புச் சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம். அன்பு தேவைப்படும் மக்கள் மீது பரிதாப உணர்வு கொள்வது அல்லது பரிதாபம் காட்டுவது, இரக்கத்தின் பல கூறுகளில் ஒன்றாகும். பக்தி என்பது, கிரேக்க-உரோமையர் உலகில், மேலதிகாரிகளுக்குப் பணிந்து நடக்கும் செயலாகும். கடவுள்கள் மீது மிகுந்த பக்தியுடன் இருப்பது, பின்னர், குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம், சிறப்பாக, வயதானவர்களிடம் உறவோடு இருப்பதாகும். ஆனால், இன்று, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் மறைக்கல்வியில், தூய ஆவியாரின் ஏழு கொடைகளில் ஒன்றாகிய, பக்தி பற்றிப் பார்ப்போம். இந்தச் சொல்லை நாம் கேட்கும்போது, சமயம் சார்ந்த ஒருவித பக்தியை நினைக்கிறோம். ஆனால் இதன் அர்த்தம் மிகவும் ஆழமானது. பரிதாபம் என்ற சொல்லைப் போல, பக்தி என்பது, பரிவன்பு மற்றும் இரக்கத்தோடு தொடர்புடையது. இயேசு, இரக்கத்திற்காக மன்றாடும் மக்கள் மீது கவனமாக இருந்து, அவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து, அன்போடு அவர்களுக்குப் பதில் அளிப்பதை நற்செய்தியில் வாசிக்கிறோம். தம்மிலும், தமது வார்த்தையிலும் நம்பிக்கை வைக்க அவர்களை ஊக்கப்படுத்தி, குணப்படுத்தும் புதுமைகளை ஆற்றுகிறார் இயேசு. வேறுபாடுகளைப் புறம்தள்ளி, தம்மை நோக்கிக் கதறிய மக்கள் மீது, இயேசு காட்டிய பக்தியுணர்வை நாமும் பின்பற்றவும், நம் சகோதர, சகோதரிகளின் எல்லாத் தேவைகள் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பவர்களாக மாறவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இரக்கத்தின் தாயாகிய அன்னை மரியா, இந்த அன்புமிக்க கரிசனைக்கும், பக்திக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். நாம் பரிவன்பில் வளரவும், தம் மகன் இயேவின் எல்லையில்லாப் பக்திப் பண்பைப் பின்பற்றி வாழவும், இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மரியா நமக்கு வரம் பெற்றுத் தருவாராக.

இவ்வாறு, இச்சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் இறைத்தந்தையின் அன்பிரக்கம், பொழியப்படச் செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.