2016-05-14 14:21:00

திருத்தந்தை : இல் கிக்கோவில் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு


மே,14,2016. இத்தாலியில், மனநலம் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படும் ஓர் இல்லத்திற்கு, இவ்வெள்ளிக்கிழமை மாலையில், திடீரெனச் சென்று, அவ்வில்லத்தினரை, வியப்பின் மகிழ்வில் ஆழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை ஆற்றிவரும் வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் ஒரு நிகழ்வாக, உரோம் சம்ப்பினோ பகுதியிலுள்ள, “இல் கிக்கோ (Il Chicco)” இல்லம் சென்று, அங்குப் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுடன் மேஜையில் அமர்ந்து உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனநலம் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படும் இவ்வில்லத்திற்குத் திருத்தந்தை சென்று, அவர்கள் கூறுவதைக் கேட்டதன் மூலம், இம்மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பும், கனிவும் வெளிப்படுகின்றன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

L'Arche என்ற அமைப்பால், உரோம் புறநகர்ப் பகுதியில், “கிக்கோ” இல்லம் 1981ம் ஆண்டில் நிறுவப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மாண்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த “கிக்கோ” இல்லத்தின் கிளைகள், இத்தாலியில் மேலும் 18 இடங்களில் உள்ளன.

1964ம் ஆண்டில், Jean Vanier என்பவரால், மாற்றுத்திறனாளிகளுக்கென உருவாக்கப்பட்ட L'Arche அமைப்பு, தற்போது 29 நாடுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட இல்லங்களைக் கொண்டிருக்கின்றது.

இரக்கத்தின் அடையாளமாக, இல் கிக்கோ இல்லத்திற்குத் திருத்தந்தை சென்றது, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், அவரின் வெள்ளிக்கிழமை இரக்கச் செயலின் ஐந்தாவது நிகழ்வாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.