2016-05-13 16:59:00

பயங்கரவாத ஒழிப்பை இளையோரிடமிருந்து தொடங்கப் பரிந்துரை


மே,13,2016. பயங்கரவாதத்தின் ஆணிவேர்களைத் தகர்த்தெறிவதற்கான முயற்சிகளை, முதலில், மனிதரின் இதயங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

தீவிரவாதப் போக்கிற்கும், பயங்கரவாதக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்தையும் எதிர்நோக்கும் இளையோரின் இதயங்களை நாம் கவர்வதன் வழியாக, பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கான நம் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

பயங்கரவாதக் கருத்தியல்கள் மற்றும் விளம்பரங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற உரையாடலில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், பயங்கரவாதக் கருத்தியல்களைப் பரப்பும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்,  சமயத் தலைவர்களுக்கு அதிகப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.

பயங்கரவாதக் கருத்தியல்களுக்கு எதிரானப் போராட்டத்தில், கல்விக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது என்றும், வரலாறு மற்றும் புனித நூல்களின் பொருளைத் திரித்துக் கூறுவது, அவை குறித்த தவறான தகவல்களைப் பரப்புவது, இவையே, பயங்கரவாதக் குழுக்கள் ஆட்களைத் திரட்டுவதில் வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக அமைகின்றன என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.