2016-05-13 16:55:00

அமைதிக்கு, மதங்களிடையே அமைதியான ஒன்றித்த வாழ்வு


மே,13,2016.  மதங்கள்  மத்தியில் நிலவும் அமைதியான ஒன்றித்த வாழ்வு, அமைதிக்கும் மனித முன்னேற்றத்திற்கும் உதவும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் இவ்வெள்ளியன்று கூறினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளில் சிறுபான்மையின மக்களைப் பாதுகாப்பது குறித்து, டோக்கியோ நகரில் நடைபெற்ற, ஐ.நா. கலாச்சாரங்கள் கூட்டமைப்பு(UNAOC) கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இன்னும் பொதுவாகச் சொல்லப்போனால் சிறுபான்மை மதத்தவர்க்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து, இவ்வுலகம் மிகுந்த கவனத்தோடும், அதில் துன்புறுவோருடன் அக்கறையுடனும் இருக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஆயர்  Ayuso Guixot.

சிறுபான்மையின மக்களைப் பாதுகாப்பது குறித்து, மத்திய கிழக்கு நாடுகளின் சமயத் தலைவர்களுடன் சேர்ந்து நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டம், சமய வேறுபாடின்றி, அனைவரையும் மதிப்பதற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் ஆயர்  Ayuso Guixot.

உரையாடல் வழியாக மத்திய கிழக்கில், கிறிஸ்தவர்களின் குடியுரிமைகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் உரைத்த ஆயர், சமூக நீதி உட்பட சமய சுதந்திரத்தை  ஊக்குவித்தல், உலகின் நிதி நிலைமையில் ஒத்துழைப்பு, பல்சமய உரையாடலை ஊக்குவித்தல், ஒழுக்கநெறி வாழ்வு சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை நிலைநிறுத்தல் போன்றவற்றையும் வலியுறுத்தினார்.

சமய சுதந்திரம் பற்றி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளதையும், இந்த ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் கோடிட்டுக் காட்டினார், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர்  Ayuso Guixot.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.