2016-05-12 15:13:00

திருத்தந்தையைப் பற்றி, பெக்டாஷி பிரிவின் தலைவர் பிராகிமாஜ்


மே,12,2016. தங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள், திருத்தந்தையை இப்புதனன்று சந்தித்தபோது, சந்திப்பு நிகழ்வின் வரைமுறைகள் எனப்படும் Protocol அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, அவர் இக்குழுவின் ஒவ்வொரு நபரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து வாழ்த்தியது, மனதைத் தொடுவதாக அமைந்தது என்று, பெக்டாஷி (bektashi) இஸ்லாமியப் பிரிவின் தலைவர் பாபா எட்மண்ட் பிராகிமாஜ் (Baba Edmond Brahimaj) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இப்புதன் காலை ஒன்பது மணிக்கு, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் மண்டபத்தின் உள் அரங்கில்,  இஸ்லாமியப் பிரிவுகளில் ஒன்றான, சூஃபி குழுமத்தின் சகோதரத்துவ அமைப்பான, பெக்டாஷி பிரிவுத் தலைவர் பிராகிமாஜ் அவர்களையும், அக்குழுவினரையும் தனியாகச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அல்பேனியா நாட்டிற்கு திருத்தந்தை அவர்கள் வருகை தந்திருந்த வேளையில், அங்கு அவரைச் சந்தித்த அனுபவத்தை இப்பேட்டியில் குறிப்பிட்ட தலைவர் பிராகிமாஜ் அவர்கள், சந்திக்கும் கலாச்சாரமும், உரையாடலும் இவ்வுலகம் மேற்கொண்டுள்ள மோதல் கலாச்சாரத்திற்குத் தகுதியான மாற்று என்பதை திருத்தந்தை நன்கு உணர்ந்துள்ளார் என்று கூறினார்.

13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பெக்டாஷி இஸ்லாமியப் பிரிவு, இன்று, உலகின் 31 நாடுகளில் பல இலட்சம் மக்களைக் கொண்டுள்ள ஓர் அமைப்பாக விளங்குகிறது. அல்பேனியாவின் 30 இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டினர், இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வோர் ஆண்டும், உலக அமைதி வேண்டி, அசிசி நகரில் திருப்பீடம் மேற்கொண்டு வரும் பல்சமய வழிபாட்டிலும், 2003ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்கள் வத்திக்கானில் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்விலும், பெக்டாஷி இஸ்லாமியப் பிரிவினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.