2016-05-12 14:41:00

திருத்தந்தை: கிறிஸ்தவக் குடும்பத்தில் பிளவுகளை விதைப்போர்


மே,12,2016. கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக இயேசு செபங்களை எழுப்புகிறார்; ஆனால், கிறிஸ்தவக் குடும்பத்தில் பிளவுகளை விதைப்போர் இன்னும் இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இறுதி இரவுணவின் போது, இயேசு, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று வேண்டிக்கொண்டதை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்தவ சமுதாயத்தில், குடும்பத்தில், பங்கில், நிறுவனங்களில் ஒன்றிப்பு, ஒற்றுமை என்பனவற்றை நாம் கடினமாக்கிவிட்டோம் என்று கூறியத் திருத்தந்தை, நம்மிடையே பிளவுகளை உருவாக்கிய வரலாற்றை எண்ணி, வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நம்மிடம் உள்ள பிரிவுகளைக் காட்டும் விதமாக, இரு கிறிஸ்தவர்களிடையே நிகழ்ந்த உரையாடலை திருத்தந்தை சுட்டிக்காட்டினார். ஒரு கிறிஸ்தவர் மற்றொரு கிறிஸ்தவரிடம், "என் கிறிஸ்து நாளை மறுநாள் உயிர்த்தெழுகிறார். உங்கள் கிறிஸ்து எப்போது உயிர்த்தெழுவார்?" என்று கேட்டதாகக் கூறியத் திருத்தந்தை, இத்தகைய வேறுபாடுகள் இருப்பதால், இவ்வுலகம் நம்மை நம்புவது இல்லை என்றும் கூறினார்.

உயிர்ப்பிலும் ஒன்றிணைய முடியாத நாம், உயிர்த்த கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கக் கடமைப் பட்டுள்ளோம் என்று திருத்தந்தை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

நம் உரையாடல் வழியே ஒன்றிப்பைக் கொணர்வதற்குப் பதில், புறம் பேசுவதால், பிளவுகளை உருவாக்கி வருகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, புறம் கூறிவந்த ஒரு பெண்ணிடம், கோழியின் இறகுகளை வீதியெங்கும் தெளித்துவிட்டு, மீண்டும் அவற்றைச் சேகரிக்கச் சொன்ன புனித பிலிப் நேரி அவர்களின் வாழ்வு நிகழ்வை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.