2016-05-12 15:11:00

இது இரக்கத்தின் காலம் : நிபந்தனையற்றதே உண்மையான நம்பிக்கை


ஒருசமயம், ஒரு மனிதர், அந்த ஊர் பெரியவரைத் தேடிச் சென்று, தனக்கு இறைநம்பிக்கை எப்படி வந்தது என்பதைப் பகிர்ந்து கொண்டார். ஐயா, எனக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தேன். அச்சமயத்தில் ஒருநாள், ஒருவர் என்னிடம், உனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுதான் குழந்தை இல்லை. எனவே கடவுளை நம்பு, உனக்குக் குழந்தை பிறக்கும் என்றார். எனக்கு இதில் சந்தேகம் இருந்தது. ஆனாலும், அவர் சொன்னபடி நடப்போமே என்று முடிவு செய்தேன். அதே ஆண்டில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்படித்தான் நான் கடவுளை நம்பத் தொடங்கினேன் என்றார் அவர். அதைக் கேட்ட பெரியவர், நீ சொல்வது சரிதான், ஆனாலும், எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அதைச் சோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் முடிவுக்கு வரவேண்டும். அதனால், இன்னொரு சோதனை செய்வோம் என்றார். நீர் கடவுளிடம் ஒரு பெண் குழந்தை கேள் என்றார் பெரியவர். சரி என்று சொல்லி ஊர் திரும்பினார் அந்த மனிதர். சிறிது காலம் கழித்து அந்த மனிதரின் வீட்டுக் கதவைத் தட்டினார் பெரியவர். கதவைத் திறந்தார் அந்த மனிதர். என்ன, கடவுள் கண் திறந்தாரா? என்றார் பெரியவர். ஐயோ, முதல் தடவை ஏதோ தற்செயலாக ஏற்பட்டது. நீங்கள் சொன்ன பிறகு, இரண்டாவது தடவை நான் தினமும் கடவுளிடம் வேண்டினேன். ஒன்றும் நடக்கவில்லை என்று விரக்தியாகச் சொன்னார் அவர். அப்போது பெரியவர், பார்த்தீரா, ஒரு தோல்வியில் எல்லாம் பறந்து போய்விட்டது. எல்லாம் நல்ல விதமாக நடக்கும் வரைக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்தது தோல்வியில் முடிந்தால், அவநம்பிக்கை ஏற்படுகிறது. எனவே, கடவுளிடம் நாம் வைக்கும் நம்பிக்கை, நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.