2016-05-11 15:30:00

ஹங்கேரி பாப்பிறைக் கல்விக்கூடத்திற்கு திருத்தந்தை வாழ்த்து


மே,11,2016. புகழ்பெற்ற உரோமை நகரில், கிறிஸ்தவ பாரம்பரியத்தின் சாட்சியங்களாக, திருத்தூதர் மற்றும் புனிதர்களின் நினைவுச்சின்னங்கள் மட்டும் அமையவில்லை, மாறாக, பல கத்தோலிக்க நிறுவனங்களும் அமைந்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்.

உரோம் நகரில் அமைந்துள்ள ஹங்கேரி நாட்டு பாப்பிறைக் கல்விக்கூடம், தன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், ஹங்கேரித் தலத்திருஅவைத் தலைவரான  கர்தினால் பீட்டர் எர்டோ அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

1940ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் துவங்கப்பட்ட ஹங்கேரி நாட்டு பாப்பிறைக் கல்விக்கூடம், அந்நாடு, கம்யூனிச அடக்குமுறையால் துன்புற்றபோது, பல அருள்பணியாளர்களுக்கும், இறையியல் அறிஞர்களுக்கும் புகலிடம் அளித்துள்ளது என்று திருத்தந்தை தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறைவனின் அழைப்பை ஏற்று, தங்கள் பணிவாழ்வைத் துவங்கும் அனைத்து இளையோருக்கும், இந்தக் கல்விக்கூடம் அறிவு, மற்றும் ஆன்மீக வளர்ச்சியைத் தரவேண்டும் என்று திருத்தந்தை வாழ்த்து கூறியுள்ளார்.

அன்னை மரியாவும், ஹங்கேரி நாட்டின் மன்னன், புனித ஸ்தேவானும் ஹங்கேரி நாட்டு பாப்பிறைக் கல்விக்கூடத்தைக் காத்தருள வேண்டுமென்று திருத்தந்தை இம்மடலில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.