2016-05-11 15:29:00

இது இரக்கத்தின் காலம்... – தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும்


காந்திஜி அவர்கள், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்தபோது, நகரத்தில் உள்ள ஒரு தெருவின் வழியாக அவர் தினமும் நடந்து செல்வது வழக்கம். ஒரு நாள், அந்தத் தெருவில் ஒரு புதிய வெள்ளை இன காவல்துறை அதிகாரி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காந்திஜியை ஓர் ஆப்ரிக்கக் கறுப்பர் என்று நினைத்து, "வெள்ளை இன காவல்துறை இருக்கும் பகுதிக்குள் ஒரு கறுப்பர் வருவதா?' என்ற ஆத்திரத்தில், அந்த காவல்துறை அதிகாரி, தடதடவென்று ஓடி வந்து காலணிகளால் காந்திஜியை உதைத்து கீழே தள்ளினார். கீழே விழுந்த காந்திஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த அதிகாரி தன்னை உதைக்கும் அளவுக்கு, தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று எண்ணியபடி தடுமாறி எழுந்தார். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த காந்திஜியின் கிறிஸ்தவ நண்பரான குரோட்ஸ் என்பவர், காந்திஜியை அந்த வெள்ளை இன காவல்துறை அதிகாரி உதைத்துக் கீழே தள்ளும் காட்சியைக் கவனித்து, "மிஸ்டர் காந்தி! இந்த காவல்துறை அதிகாரி, ஒரு தவறும் செய்யாத உங்களை உதைத்துக் கீழே தள்ளியதை என் கண்களால் பார்த்தேன். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். நான் வந்து சாட்சி சொல்லுகிறேன்!'' என்றார். அதற்கு காந்திஜி, "அன்புள்ள குரோட்ஸ்! என் சொந்த விடயங்களுக்காக நான் நீதிமன்றத்திற்குப் போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். என்னைப் பற்றி இந்த காவல்துறை அதிகாரிக்கு எதுவும் தெரியாது. ஆகவே என்னையும் ஒரு கறுப்பர் என்றே நினைத்து, தனது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டார். நிறவெறியை இவர்கள் எப்போது நிறுத்துகிறார்களோ அன்றுதான், இவர்களே நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பர்" என்று கூறினார்.

அதைக் கேட்ட அந்த வெள்ளை இன காவல்துறை அதிகாரி, காந்திஜியின் உன்னதமான குணத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் வெட்கித் தலைகுனிந்தார். அதோடு தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். காந்திஜியும் மன்னித்துவிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.