2016-05-11 15:11:00

அமைதி ஆர்வலர்கள் : 2014ல் நொபெல் அமைதி விருது


மே,11,2016. பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai), இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி (Kailash Satyarthi) ஆகிய இருவரும் 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவருமே, சிறார் மற்றும் இளையோர் எதிர்நோக்கும் அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துச் சிறாரின் கல்வியுரிமைக்காகவும் போராடியவர்கள், போராடி வருபவர்கள். சிறுமி மலாலா யூசுப்சாய் அவர்கள், பாகிஸ்தானின், ஸ்வாட் (Swat) பள்ளத்தாக்கிலுள்ள மிகப் பெரிய நகரமான மின்கோராவில் (Mingora), 1997ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார். இவர் Ziauddin, Tor Pekai Yousafzai தம்பதியரின் மூத்த மகள். மலாலாவுக்கு இரு தம்பிகள் உள்ளனர். இவரின் சிறு வயதில், மின்கோரா நகரம், கோடைகால விழாக்களுக்குப் புகழ்பெற்றதாக இருந்தது. அதனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் அது அமைந்திருந்தது. ஆனால், 2007ம் ஆண்டில், மலாலாவுக்குப் பத்து வயது நடந்தபோது, ஸ்வாட் பள்ளத்தாக்கின் நிலைமை, இவரின் குடும்பத்திலும், அப்பகுதியின் சமூகத்திலும் துரிதமாக மாற்றங்களைக் கொணர்ந்தது. இப்பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி முழுவதின் சமூக-அரசியல் சூழலில், ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தலிபான் மாறியது. சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதற்கும், நடனம், தொலைக்காட்சி பார்ப்பது போன்ற கலாச்சார நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்கொலைத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெற்றன. சிறுமிகளுக்கு கல்வி உரிமை என்பதை எதிர்ப்பதையே, தலிபான்கள், தங்களின் பயங்கரவாத நடவடிக்கைக்கு மூலைக்கல்லாகக் கொண்டிருந்தனர். 2008ம் ஆண்டின் இறுதிக்குள், ஏறத்தாழ நானூறு பள்ளிகளை அழித்துவிட்டனர் தலிபான்கள்.

மலாலா, தனது தந்தை ஜூயாவுதீன் அவர்கள், ஆரம்பித்த பள்ளியில் படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும் வயதை எட்டுவதற்கு முன்னரே, ஆசிரியராகப் பணியாற்றினால், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று, கதைகள் வழியாக இவரது தந்தை இவருக்கு விளக்கி, இவரில் அறிவுத் தாகத்தை ஊட்டி வந்தார். கல்வி தனது அடிப்படை உரிமை என்பதில் உறுதியாக இருந்த மலாலா, தலிபான்களின் எதிர்ப்பையும் விடுத்துப் பள்ளிக்குச் சென்று வந்தார். ஸ்வாட் பகுதியில், சிறுமிகள் பள்ளிகளை, தலிபான்கள் தாக்கத் தொடங்கிய பின்னர், 2008ம் ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தானின் பேஷ்வார் நகரில், “கல்வி கற்பதற்கு எனக்கிருக்கும் அடிப்படை உரிமையை எடுப்பதற்கு தலிபான்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்ற தலைப்பில் மலாலா உரையாற்றினார். 2009ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்வாட் பகுதியில் தலிபான்களின் அச்சுறுத்தல்கள் பற்றியும், பள்ளிக்குச் செல்வதற்குத் தனக்கிருக்கும் ஆர்வம் பற்றியும்  பிபிசியின் blogல், உருது மொழியில், “Gul Makai” என்ற பெயரில் எழுதினார். “எனக்குப் பயமாக இருக்கிறது” என்ற தலைப்பில் எழுதி வந்த இவரது உண்மைப் பெயர் பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் தெரிய வந்தது. தலிபான்களால், எனக்குப் பள்ளிக்குச் செல்லப் பயமாக இருக்கிறது என்று எழுதினார். பாகிஸ்தானில், தலிபான்களுக்கு எதிரான கடும் போர் தொடங்கவே, அப்பகுதி மக்கள், பலநூறு மைல்களுக்கு அப்பால் இடம்பெயர்ந்தனர். சில வாரங்கள் கழித்து, ஸ்வாட் பகுதிக்குத் திரும்பிய மலாலா, மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான தனது உரிமையை வலியுறுத்த, ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகள், மலாலாவும், அவரின் தந்தையும், பாகிஸ்தான் சிறுமிகளுக்கு இலவச தரமான கல்வி வழங்கப்பட வேண்டுமென்று, விடுத்துவந்த அழைப்பு நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இதனால், 2011ம் ஆம்டின் அனைத்துலக சிறார் அமைதி விருதுக்கு, மலாலா பரிந்துரைக்கப்பட்டார். அதே ஆண்டில்,  மலாலாவுக்கு, பாகிஸ்தானின் தேசிய இளையோர் அமைதி விருது வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிற்பகலில், மலாலா பள்ளியிலிருந்து, பள்ளி வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, இரு இளம் தலிபான்கள் வாகனத்தை நிறுத்தி, மலாலா யார் என்று கேட்டு, மூன்று முறை சுட்டனர். ஒரு குண்டு தலையில் விழுந்து அடுத்த பக்கம் வெளியேறி தோள்பட்டையைத் தாக்கியது. படுகாயமடைந்த சிறுமி மலாலா, பேஷ்வாரிலுள்ள பாகிஸ்தான் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு நாள்களுக்குப் பின்னர், பிரிட்டனின் பிர்மிங்காமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்நகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல வாரங்கள் சிகிச்சைக்குப் பின்னர், 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிர்மிங்காமில் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார் மலாலா.

தலிபான்களால் சுடப்பட்ட பின்னர் மலாலா உலக அளவில் பெரும் ஆதரவைப் பெற்றார். 2013ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, மலாலா, தனது 16வது பிறந்த நாளில், நியுயார்க் சென்று ஐ.நா.வில் உரையாற்றினார். "நான் மலாலா : கல்விக்காகப் போராடிய சிறுமி மற்றும் தலிபானால் சுடப்பட்டவர்" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டார். இதனை அங்கீகரிக்கும் விதமாக,  2013ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி, ஐரோப்பிய பாராளுமன்றம், கருத்துச் சுதந்திரத்திற்கான புகழ்பெற்ற Sakharov விருதை வழங்கியது. 2014ம் ஆண்டில் தனது 17ம் வயதில், நொபெல் அமைதி விருதையும் மலாலா பெற்றார். மலாலாவும், அவரின் தந்தையும் சேர்ந்து ஆரம்பித்த மலாலா நிதி அமைப்பின் வழியாகக் கிடைத்த தொகையைக் கொண்டு, 2014ம் ஆண்டில், ஜோர்டான் சென்று சிரியா அகதிகளையும், கென்யா சென்று, இளம் மாணவிகளையும் சந்தித்தார் மலாலா. நைஜீரியா சென்று, போக்கோ ஹாரம் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். மலாலவின் 18வது பிறந்த நாளான, 2015ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, மலாலா தினமும் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில், மலாலாவின் வாழ்வு பற்றிய (He Named Me Malala) ஓர் ஆவணப்படமும் வெளியானது.   

“ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியர், இவ்வுலகை மாற்ற இயலும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்”. “உலகில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வு கல்வி என்றே நான் நினைக்கிறேன்”. “மக்கள் பேசும் மொழி, தோல் நிறம், அல்லது மதத்தை வைத்து, பாகுபாடுகள் இருக்கவே கூடாது”... இவ்வாறெல்லாம் கூறியிருப்பவர், பிரித்தானியாவில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் பாகிஸ்தான் இளம்பெண் மலாலா யூசுப்சாய்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.