2016-05-11 15:48:00

அணு ஆயுதங்களை அழிப்பது, இளையோரின் கடமை


மே,11,2016. அணு சக்தியால் இயங்கும் ஆயுதங்களை இளையோர் உருவாக்கவில்லை, ஆனால், அவற்றை உலகிலிருந்து முற்றிலும் அழிப்பது, இளையோரின் இன்றியமையாதக் கடமை என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

அணு ஆயுதமற்ற உலகம் என்ற கருத்தை வலியுறுத்த, ஐ.நா. பொது அவை அறிவித்திருந்த ஓர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு, பான் கி மூன் அவர்கள், விருது வழங்கிய வேளையில், இவ்வாறு உரையாற்றினார்.

அணு ஆயுதங்களின் ஒழிப்பு, மற்றும் பெருமளவில் மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் அனைத்தின் ஒழிப்பு என்பவை, ஐ.நா. அவையின் மிக முக்கியமான கோட்பாடுகளாக, 1946ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன என்பதை, மீண்டும் நினைவுறுத்தும் வண்ணம், இந்த ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில், 123 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, 4,100க்கும் மேற்பட்ட ஓவியங்களை அனுப்பியிருந்தனர்.

இவற்றில், பெரு நாட்டின் லீமா நகரைச் சேர்ந்த Ivan Ciro Palomino Huamani என்ற இளையவர் முதல் பரிசையும், அமெரிக்காவைச் சேர்ந்த Michelle Li, மற்றும் Anjali Chandrashekar என்ற இளம் பெண்கள், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசுகளையும் வென்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.