2016-05-09 15:25:00

வாரம் ஓர் அலசல் – மோதல்களுக்கு முடிவு கட்டுவோம்


மே,09,2016. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் போரிட்டுக்கொண்டிருந்த சமயம் அது. ஒருநாள் இரவில், எனது மேலதிகாரிகள் என்னை எழுப்பி, உனது தலைமையிலுள்ள வீரர்களில் திறமையான சிலரை ஒன்றுதிரட்டு என்றார்கள். ஏன், நாங்கள் எங்கே போகிறோம்? என்று கேட்டேன். அதைப் பற்றி கவலை வேண்டாம். அந்த வாகனத்தில் ஏறுங்கள் என்றார்கள். நாங்கள் மூன்று இராணுவக் கூடாரங்களைக் கடந்து சென்றோம். அங்கே சாலையில் ஆறு அமெரிக்கப் படை வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. நீங்கள் இன்று இரவில், படை வீரர்களின் சடலங்களைச் சேகரிக்க வேண்டும் என்றார்கள். மனது வலித்தது நாங்கள், துண்டு துண்டாகக் கிடந்த உடல்களைச் சேகரித்து, பைகளில் வைத்தோம். பின்னர் எங்கள் கூடாரத்திற்குத் திரும்பினோம். அடுத்த நாள் காலையில் மீண்டும் இவ்வாறே நடந்தது. ஒரே நாளில் நான்கு பேரை நான் சுட்டேன். படைவீரன் என்றால் இதுதான் வேலை. அமெரிக்க வீரர்கள், எதிரிகளின் படை வீரர்கள் என, பல சடலங்களை நான் சேகரித்தேன். இதனால், PTSD என்ற, ஒரு கொடூர நிகழ்வைப் பார்ப்பதாலோ அல்லது அதை அனுபவிப்பதாலோ ஏற்படும் மனநல பாதிப்பு(Post-Traumatic Stress Disorder) நோயால் தாக்கப்பட்டேன். நாட்டுக்கு அனுப்பபட்டேன். சிகிச்சை பெற்றேன். நீ சரியாகி விட்டாய். மீண்டும் ஈராக் செல் என்றார்கள். ஈராக்கில் ஒருநாள் இரவில், ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பம் சோதனைச்சாவடியைக் கடக்க முயன்றபோது, முழுக் குடும்பத்தையுமே சுட்டோம். அதில் 13 வயது குழந்தையும், தாயும் மட்டுமே பிழைத்தனர். பின்னர் அந்த இடத்தைப் பார்த்தபோது, நான் சுட்டதில் உயிருக்குப் போராடிய எட்டு வயதுச் சிறுமியைக் காப்பாற்ற முயற்சித்தேன். பலன் இல்லை. மீண்டும், PTSD எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டேன். இப்போது எனது மனைவி, மற்றோர் ஆணைத் தேடிவிட்டார். திருமண முறிவும் பெற்றுவிட்டேன். எனது மனைவி, வீடு, கார், என எல்லாவற்றையும் கேட்கிறார். இரவில் தூங்குவதற்குத் தூக்க மாத்திரை எடுக்கிறேன். அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துகிறேன். ஈராக்கில் என்னோடு இருந்த வீரர்கள் எப்போதாவது தொலைபேசியில் பேசுவார்கள்....     

அன்பு நெஞ்சங்களே, ஈராக்கில் 2003 மற்றும் 2005ம் ஆண்டுகளில் போரிட்ட அமெரிக்கப் படைவீரர் மைக்கிள் காஸ் (Michael Goss) என்பவரின் பகிர்வு இது. ஏழு ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியுள்ள இவரைப் போன்று, போர்முனைகளில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் வீரர்களின் அனுபவங்களைக் கேட்டால் நம் நெஞ்சு பொறுக்காது. New England Journal of Medicine என்ற இதழ், 2004ம் ஆண்டில் வெளியிட்ட தகவலின்படி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு, ஏறத்தாழ பதினான்கு இலட்சம் இராணுவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஈராக்கில், 86 விழுக்காட்டுப் படை வீரர்கள், யாராவது ஒருவர் கடுமையாய்க் காயமடைந்ததை அல்லது கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கின்றனர். ஏறத்தாழ 77 விழுக்காட்டுப் படை வீரர்கள், எதிரிகளைச் சுட்டுள்ளனர். 75 விழுக்காட்டுப் படை வீரர்கள், சிறாரும் பெண்களும் உயிருக்குப் போராடியதைப் பார்த்தபோதிலும், எவ்வித உதவியும் செய்ய முடியாத நிலையில் இருந்திருக்கின்றனர். 28 விழுக்காட்டுப் படை வீரர்கள், அப்பாவி மக்களின் இறப்புக்குப் பொறுப்பேற்கின்றனர். 51 விழுக்காட்டுப் படை வீரர்கள் இறந்த மனித உடல்களைச் சேகரித்துள்ளனர். ஈராக்கிலிருந்து திரும்பிய படை வீரர்களில் ஐந்தில் ஒருவர் PTSD எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்பர்களே, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏற்கனவே இடம்பெற்ற போரின் நிலை இதுவென்றால், இக்காலத்தில் சிரியாவில் இடம்பெறும் போர் பற்றியோ, 2 கோடியே 70 இலட்சம் சோவியத் யூனியன் மக்கள் உட்பட, உலகில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய இரண்டாம் உலகப் போரைப் பற்றியோ சொல்லவே தேவையில்லை. அனைத்துக் கண்டங்களிலும், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் நேரிடையாக ஈடுபட்ட இந்தப் போர், வார்த்தையால் சொல்ல முடியாத கடும் துன்பங்களைக் கொணர்ந்தது. உலகில் நடந்த மற்றும் நடக்கும் போர்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது வாட்ஸ்ப்பில் ஒரு செய்தி வந்தது. அந்த விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்னதாக, ஒருவரின் இருக்கையைச் சுற்றி பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து அமர்ந்தனர். அவர்கள், எல்லைப் பாதுகாப்புப் பணிக்குச் செல்வதற்காக, ஆக்ராவில் இரண்டு வாரம் பயிற்சிக்குச் செல்பவர்கள். விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் மதிய உணவு தயார் என்று பணிப்பெண்கள் அறிவித்தனர். சரி உணவு வாங்கலாம் என்று இந்தப் பயணி, தனது பர்சை எடுத்தபோது, நீ சாப்பாடு வாங்கலையா, இல்லை, இங்கே விலை அதிகம், என்னால் அவ்வளவு காசு கொடுக்க முடியாது, மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும், அங்கே விலை குறைவு, அங்கே உண்ணலாம் என்று, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த இராணுவ வீர்ர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டார். இவர், விமானப் பணிப்பெண்ணிடம், அந்த பதினைந்து பேருக்கான பணத்தைக் கொடுத்து, உணவுக் கொடுக்கச் சொன்னார். அந்தப் பணிப்பெண் கண்களில் நீர் மல்க, இது கார்கிலில் இருக்கும் எனது சகோதரனுக்கும் சேர்த்து என்றார். பின்னர் இந்த மனிதருக்குப் பாராட்டும், உதவிகளும் கிடைத்துள்ளன. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்குச் செல்லும் வீரர்களுக்குச் சாப்பிடுவதற்கு கையில் போதுமான காசு இல்லை என்று கேட்கும்போது, நேயர்களே, உங்கள் மனது நிச்சயம் கனத்திருக்கும்!

அன்பு நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில் படை வீரர்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மே  09, இத்திங்களன்று, இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மற்றும் அவர்களோடு ஒப்புரவாகும் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 1945ம் ஆண்டு மே 8ம் தேதி ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அவ்வெற்றியை, இரஷ்யாவில் மே 9ம் உலகத் தலைவர்கள் சிறப்பித்தனர். போரின் வடுக்களிலிருந்து இவ்வுலகைக் காப்பாற்றவும், புதிய அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், பிரச்சனைகள் அமைதியான வழிகளில் தீர்க்கப்படவும் வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இந்த உலக நாளை 2004ம் ஆண்டில் உருவாக்கியது. இந்த நாளை, மே 08 அல்லது 09ம் தேதிகளில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டது. இதன்படி, இரண்டாம் உலகப் போர் முடிந்த 71வது ஆண்டு நினைவு தினம், இந்தியா முழுவதும் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் இராயப்பு அவர்கள், இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல, பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம் என்று குறிப்பிட்டார். ஒரு நாட்டின் பெரும்பான்மை இன மக்களிடம் உள்ள அதிகபட்ச இன தேசிய உணர்வின் அச்சத்தால் சிறுபான்மை மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் ஆயர் தெரிவித்தார். தற்போது, ஈராக்கில் நிலவும் பன்முக நெருக்கடிகள் களையப்படாவிட்டால், 2016ம் ஆண்டு முடிவதற்குள் இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயரக்கூடும் என்று ஐ.நா. அதிகாரி Ján Kubiš அவர்கள் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிக்காவிலும் இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள துன்பங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் ஐ.நா. கேட்டுள்ளது. ஆனால், உலகில், ஆயுத மோதல்கள் இன்னும் நின்றபாடில்லை. இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடிய, இரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை, கடந்த புதன்கிழமை ஈரான் பரிசோதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்தாத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 43 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் என, வடகொரியா அதிபர் கிம் ஜாங் - யுன் கூறியுள்ளார்.

அன்பர்களே, உலகப் போரில் பலியானவர்களை நினைவுகூரும் இந்நாளில், அப்பாவி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு போர்களுக்கு முடிவும், தீர்வும் காண வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தில் எல்லா அரசியல் தலைவர்களும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சொற்போரில் ஈடுபட்டு, ஓட்டுப் பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்போது இந்தியாவில் விசாரணையில் இருக்கிற ஊழல்களின் மொத்தக் கணக்கின் தொகையை வாசிக்கும்போதே மூச்சு வாங்குகிறது. ஒன்பது கோடியே பத்து இலட்சத்து, அறுபதாயிரத்து, முந்நூற்று இருபத்து மூணு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் ரூபாய்! (ரூ.9,10,60,323,43,00,000/-).

அன்பர்களே, இந்தியாவின் மிகப் பெரிய பலம் இளையோர்தான். இவர்கள், இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு என்பது ஒரு பெரிய வரம். எனவே, நாட்டின், மாநிலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல்களில் இளையோர் சக்தி, இந்தியாவின் சக்தியாக வீறுகொண்டு எழுந்து, அரசியல் தலைவர்களுக்கிடையே நடக்கும் மோதல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது, பொதுநலன் விரும்பிகளின் எதிர்பார்ப்பு. இந்த அரசியல் போர்களுக்குள் சிக்குண்டுள்ள தொண்டர் படைக்கு விழிப்புணர்வு ஊட்டி, இவற்றிற்குப் பலியாகும் ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவார்களாக! இளையோரே, உங்களுக்குத்தான் முகநூல், வாட்ஸப் என்று பல நவீனங்கள் இருக்கின்றனவே. தமிழக வெள்ளத்தின்போது செயல்பட்டது போல, இப்போதும் செயல்படுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.