2016-05-09 15:49:00

அன்புப்பணிகளோடு நற்செய்தியின் மதிப்பீடுகளையும் கற்பியுங்கள்


மே,09,2016. Circolo San Pietro,  அதாவது தூய பேதுருவின் குழு என்ற அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று காலை வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் ஏழை மக்களுக்கு இக்குழுவினர் தினமும் ஆற்றி வரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

ஏழை மக்களை சந்திக்கவும், அவர்களின் துயர்களுக்கு செவி மடுக்கவும், அவர்களோடு பகிரவும் திருஅவை மேற்கொள்ளும் முயற்சிகளின் வெளிப்பாடாக, தூய பேதுரு குழுவின் செயல்கள் உள்ளன என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஏழைகளின் நடுவில் செல்லும்போது நற்செய்தியின் மதிப்பீடுகளையும் எடுத்துச் செல்லுங்கள், மன்னிப்பு, அன்பு, மற்றவர்களின் நலனுக்காக உழைத்தல் போன்ற மதிப்பீடுகளை அவர்களுக்கு காட்டுங்கள் என விண்ணப்பித்தார்.

அன்னை மரி பக்திக்கென ஒதுக்கப்பட்ட இந்த மாதத்தில்  அந்த அன்னையின் வழிகாட்டுதலை பின்பற்றி, உதவி தேவைப்படும் மக்களை நாடி ஓடிச்செல்வோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

பிறரன்பின் நற்செய்திக்கு தொடர்ந்து சாட்சிகளாக விளங்குவதுடன், பிறரன்புப் பணிகளை செபத்தின் துணைகொண்டு பலப்படுத்துங்கள் எனவும், தூய பேதுருவின் குழு என்ற அமைப்பின் அங்கத்தினர்களை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய பேதுரு குழு என்பது 1869ம் ஆண்டு கர்தினால் இயக்கோபினி அவர்களின் வழிகாட்டுதலில், திருத்தந்தையர்களின் பணிகளுக்கு உதவும் நோக்கில், பிரபுக் குடுமபங்களின் இளையத் தலைமுறையினரால் உருவாக்கப்பட்டது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.