2016-05-07 14:53:00

திருத்தந்தை, இத்தாலிய மறைப்பணி மருத்துவர்கள் சந்திப்பு


மே,07,2016. உலகின் பல நாடுகளில் வழங்கப்படும் நோய்க்கான சிகிச்சைகள், அனைவரின் ஓர் உரிமையாக இல்லை, மாறாக, சிகிச்சை பெற வசதியுள்ள சிலருக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு சலுகையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நலவாழ்வுப் பணிகளும், சிகிச்சைகளும், மருந்துகளைப் பெறுவதும், இன்னும் கானல் நீராகவே பலருக்கு உள்ளன என்றும், மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள், சிகிச்சை பெற பண வசதியின்றி இருக்கின்றனர், அத்தியாவசியமான மற்றும் முக்கிய சிகிச்சைகளுக்குக்கூட மருத்துவமனைக்குச் செல்ல இயலாமல் உள்ளனர் என்றும் திருத்தந்தை கூறினார்.

CUAMM எனப்படும் ஆப்ரிக்காவுடன் மருத்துவர்கள் என்ற இத்தாலிய அரசு-சாரா அமைப்பின் தன்னார்வலர்கள், பணியாளர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என, ஏறத்தாழ ஒன்பதாயிரம் உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

நற்செய்தியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, இந்த அமைப்பினர் மறைப்பணிக்கு வழங்கிவரும் சான்று வாழ்வும், துணிச்சலுடன் இவர்கள் ஆற்றும் பணியும், இவர்களின் மருத்துவமனை, VIPகளின் மருத்துவமனை பட்டியலில் இல்லாமல், ஏழைகள், வாழ்வில் புண்பட்டவர்கள், வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழையிலும் ஏழைகளுக்கு உதவும் மருத்துவமனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பதை திருஅவைக்கு வெளிப்படுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

இக்கால மற்றும் வருங்கால ஆப்ரிக்கக் கண்டத்திற்கு இவ்வமைப்பினர் ஆற்றும் பணிக்கு, தனது செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜோர்டானில் பணியாற்றிய இத்தாலிய மருத்துவர் Francesco Canova, ஆயர் Girolamo Bortignon ஆகிய இருவராலும் CUAMM தன்னார்வலர் அமைப்பு, இத்தாலியின் பதுவை நகரில் 1950ம்  ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது, இத்தாலியில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் நலவாழ்வு அரசு-சாரா அமைப்பாகும். அருள்பணி Luigi Mazzucato அவர்கள் தலைமையில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு, ஆப்ரிக்காவின் ஏழு நாடுகளில்(அங்கோலா, எத்தியோப்பியா, மொசாம்பிக், சியெரா லியோன், தென் சூடான், டான்சானியா, உகாண்டா) மருத்துவ நிபுணர்களைக் கொண்டு உதவிகளை ஆற்றி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.