2016-05-06 16:26:00

வேசாக் புத்தமத விழாவுக்கு திருப்பீடத்தின் செய்தி


மே,06,2016. கத்தோலிக்கரும், புத்த மதத்தினரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்துள்ளது.

கௌதம புத்தரின் பிறப்பு, அவர் ஞானம் பெற்றது மற்றும் அவரின் இறப்பைக் கொண்டாடும்,  புத்த மதத்தினரின் Vesakh விழாவை முன்னிட்டு, உலகிலுள்ள அனைத்து புத்த மதத்தினருக்குமென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.

காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள நெருக்கடிநிலைக்கு, மனிதரின் செயல்களின் பங்கீடு உள்ளதால், கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும், சுற்றுச்சூழல் ஆன்மீகத்தைக் கடைப்பிடித்து, அதனைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அச்செய்தி வலியுறுத்துகிறது.

இக்காலச் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பல்சமய ஒத்துழைப்பை அதிகம் வலியுறுத்துகின்றது என்றும்,  காலநிலை மாற்றத்தால் மனித சமுதாயம் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து, அதனை விடுவிப்பதற்கும், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கும், கத்தோலிக்கர் மற்றும் புத்த மதத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அச்செய்தி கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள, Laudato si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் வலியுறுத்தும் கருத்துக்களின் அடிப்படையில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இச்செய்தியை வழங்கியுள்ளது.

இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அவவ்வையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.