2016-05-06 16:15:00

வளரச்சித்திட்ட இலக்குக்கு பயிற்சி பெற்ற தாதியர் உதவி


மே,06,2016. பேறுகாலம் மற்றும் குழந்தை பிறப்பின்போது, உலகில், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ மூன்று இலட்சம் பெண்கள் இறக்கும்வேளை, பயிற்சி பெற்ற தாதியர்களால், இவற்றில் பெருமளவான இறப்புக்களைத் தடுக்க இயலும் என்று, ஐ.நா. நிறுவனம் கூறியது.

மே 05, இவ்வியாழனன்று, உலக தாதியர் தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு தெரிவித்த, ஐ.நா.வின், UNFPA மக்கள்தொகை நிதி அமைப்பின் இயக்குனர் Babatunde Osotimehin அவர்கள், ஏறத்தாழ முப்பது இலட்சம் குழந்தைகள், பிறந்த நான்கு வாரங்களுக்குள்ளே இறக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பேறுகால நலவாழ்வுக்கு முதுகெலும்பாக இருக்கும் தாதியர்களை ஆதரிப்போம் என்றும் கூறிய Osotimehin அவர்கள், பெண்கள், சிறுமிகள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதில், நன்றாகப் பயிற்சி பெற்ற தாதியர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறினார்.

UNFPA அமைப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான தாதியர்க்குப் பயிற்சியும், ஆதரவும் அளித்து வருகின்றது. மேலும், UNFPA அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளில், 66 ஆயிரம் தாதியர்க்குப் பயிற்சியளித்துள்ளது. 

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.