2016-05-06 16:16:00

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் விழா மே 06


மே,06,2016. மே,06 இவ்வெள்ளியன்று, திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களான சுவிஸ் வீரர்களின் விழாவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இந்த மெய்க்காப்பாளர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

1527ம் ஆண்டில், உரோம் நகரம் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் அவர்களைப் பாதுகாப்பதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டுப் படைவீரர்கள் போரிட்டனர். அவர்களில் 147 பேர் கொல்லப்பட்டனர். இப்படைவீரர்களைக் கவுரவிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியில் உள்ளனர். புதிய மெய்க்காப்பாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் மே 6ம் தேதி, வத்திக்கானில், பணி வாக்குறுதி எடுக்கின்றனர்.

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் இந்த மெய்க்காப்பாளர்களுக்கு ஆற்றிய மறையுரையில், வாழ்வின் ஆண்டவரில் விசுவாசமின்றி, இத்தகைய வீரத்துவமான மரணம் இயலக்கூடியதல்ல என்று கூறினார் கர்தினால் பரோலின்.

உயிர்த்த ஆண்டவர் வழங்கும் மகிழ்வின் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, சொந்த நாடான சுவிட்சர்லாந்திலும், உலகிலும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழுமாறு, சுவிஸ் கார்ட்ஸைக் கேட்டுக்கொண்டார் கர்தினால் பரோலின். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.