2016-05-06 15:27:00

திருத்தந்தைக்கு ஐரோப்பிய Charlemagne விருது


மே,06,2016. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உயரிய விருதான, Charlemagne அனைத்துலக விருது, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜெர்மன் சான்சிலர் Angela Merkel, ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schultz, ஐரோப்பிய ஆலோசனை அவைத் தலைவர் Donald Tusk, ஐரோப்பிய அவைத் தலைவர்  Jean-Claude Juncker ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, Charlemagne விருதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் வழங்கியது. இவ்விருது வழங்கும் விழாவில், இத்தாலியப் பிரதமர் மத்தேயு ரென்சி அவர்கள் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

இவ்விருதைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாண்புமிக்க வருங்காலத்தையும், நம் சமூகங்களுக்கு அமைதியான எதிர்காலத்தையும் அமைக்க நாம் விரும்பினால், சமூகத்தில் அனைவரையும், உண்மையாகவே உள்ளடக்கி உழைப்பதன் வழியாகவே அடைய முடியும் என்று கூறினார்.

தளர்ச்சியடைந்துள்ள, அதேநேரம், சக்திகளிலும், வாய்ப்புகளிலும் இன்றும் வளமையாக  இருக்கின்ற ஐரோப்பாவை மறுபிறப்படையச் செய்வதற்கு, திருஅவை தனது பங்கை ஆற்ற முடியும் மற்றும் ஆற்ற வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியை அறிவிப்பதே, திருஅவையின் ஒரே பணி என்றும், இயேசுவின் எளிமையான, ஆனால், வலுவான பிரசன்னத்துடன், மனித சமுதாயத்தின் காயங்களை ஆற்றுவதற்கு, இப்பணி, எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்றும், இயேசுவின் இரக்கம், ஆறுதலளித்து ஊக்கப்படுத்துகின்றது   என்றும் திருத்தந்தை கூறினார்.

உரையாடலில் எவரும் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது என்றும், ஒருங்கிணைந்த மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட சமுதாயத்தை அமைப்பதில், சிறியவர் முதல் மிகப்பெரியவர் வரை, ஒவ்வொருவருக்கும் ஆக்கப்பூர்வமான பங்கு உள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.