2016-05-06 15:51:00

கிறிஸ்தவர், துன்பத்தில் நம்பிக்கையுடன் வாழ்கின்றார்


மே,06,2016. தனது துன்பத்தில் துவண்டு விடாமல், அதேநேரம், எவராலும் எடுத்துவிட முடியாத மகிழ்வை, இறைவன் தருகிறார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவர் வாழ்கின்றார் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தாம் பாடுபடுவதற்கு முன்னர், தம் சீடர்களிடம் கூறிய, உங்கள் துயரம் மகிழ்வாக மாறும் என்ற நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனை மற்றும் துன்பத்தை உருவகமாக வைத்து சிந்தனைகளை வழங்கினார்.

குழந்தை பிறக்கும் நேரம் வரும்போது வேதனை அனுபவிக்கும் பெண், அக்குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் அவ்வேதனையை மறந்து விடுவது போன்று, நம் வாழ்வில், வேதனையில் நாம் அனுபவிக்கும் துயரமும், மகிழ்வாக மாறும் என்று கூறினார் திருத்தந்தை.

மகிழ்வும், துன்பமும் ஒன்றாக இணைந்து செல்பவை என்றும், நம்பிக்கையில்லாத மகிழ்வு, கேலிப்பேச்சு போன்றதாக இருக்கும் என்றும் உரைத்த திருத்தந்தை, உண்மையான மற்றும் உறுதியான மகிழ்வு இருக்கும்போது, மேம்போக்கான மகிழ்வுக்கு இடமில்லை என்றும் கூறினார். 

மனித மகிழ்வு, சில துன்பங்களில் எதனாலும் எடுத்துவிடமுடியும், ஆனால் இயேசு வழங்க விரும்பும் மகிழ்வை, யாராலும் எடுத்துவிட முடியாது என்றும் மறையுரையில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் பிரச்சனைகள் இருக்கும், ஆயினும், இயேசு நமக்கு அவற்றை மகிழ்வாக மாற்றுவார் என்றும் கூறினார்.

மேலும், "கிறிஸ்துவே நம் மிகப்பெரும் மகிழ்வு; அவர் நம் பக்கம் எப்போதும் இருக்கிறார் மற்றும் நம்மை அவர் ஒருபோதும் சோர்வுற விடமாட்டார்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.