2016-05-06 16:27:00

இஸ்பெயினில் சைகை மொழியில் திருப்பலி


மே,06,2016. செவித்திறன் இழந்தோர், திருப்பலியில் முழுமையாகப் பங்குகொள்ள உதவும் நோக்கத்தில், இஸ்பெயின் நாட்டில், 24 ஆலயங்களில், ஒவ்வொரு வாரமும், இருபதுக்கு மேற்பட்ட அருள்பணியாளர்கள், சைகை மொழியில் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

இது குறித்துப் பேசிய, இஸ்பெயின் ஆயர் பேரவையின் செவித்திறன் இழந்தோர் பணிக்குழுவின் தேசிய இயக்குனர் அருள்பணி Sergio Buiza அவர்கள், செவித்திறன் இழந்தோர் உட்பட, நற்செய்தியை எண்ணற்ற மக்களுக்கு எடுத்துச் செல்வதன் முயற்சியில் ஒன்றே, சைகை மொழியில் திருப்பலி என்று தெரிவித்தார்.

இஸ்பெயின் நாட்டின் Bilboa நகரிலுள்ள புனித Santiago பேராலயத்தில், ஒவ்வொரு வாரமும், சைகை மொழியில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணி Buiza அவர்கள், இஸ்பெயினில், ஏறத்தாழ பத்து இலட்சம் பேர், ஏதாவது ஒரு நிலையில், கேட்கும் திறனை இழந்துள்ளனர் என்று கூறினார்.

இஸ்பெயினில், சைகை மொழியில் திருப்பலி நிறைவேற்றப்படும் ஆலயங்களில் ஒவ்வொரு வாரமும், குறைந்தது 1,250 பேர் கலந்துகொள்கின்றனர் என்று, CNA செய்தி நிறுவனம் கூறியது. 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.