2016-05-05 15:53:00

நைஜீரிய அரசுத் தலைவரின் முயற்சிகளுக்கு, ஆயர்கள் பாராட்டு


மே,05,2016. போகோ ஹராம் தீவரவாத அமைப்பிற்கும், நாட்டில் நிலவும் ஊழலுக்கும் எதிராக நைஜீரிய அரசுத் தலைவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவரும், ஜோஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Ignatius Ayau Kaigama அவர்கள், நைஜீரிய அரசுத் தலைவர் Muhammud Buhari அவர்களை நேரில் சந்தித்து, இந்த பாராட்டைத் தெரிவித்ததோடு, அரசுத் தலைவரின் முயற்சிகளுக்கு, ஆயர்களின் முழு ஆதரவும் உண்டு என்று உறுதி கூறினார்.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலத்திருஅவையும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பும் ஆற்றிவரும் பணிகள் குறித்தும் பேராயர் Kaigama அவர்கள் இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் குறைந்து வருவதைக் குறித்து அரசுத் தலைவரிடம் தன் கவலையை வெளியிட்ட பேராயர் Kaigama அவர்கள், நைஜீரிய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குற்றம் புரிபவர் யாராயினும் எவ்வித வேறுபாடும் இன்றி, அவர்களை சட்டத்திற்கும், நீதிக்கும் முன் கொணர்வது அரசுத் தலைவரின் முக்கியப் பணியாக இருக்கவேண்டும் என்று பேராயர் Kaigama அவர்கள் விண்ணப்பித்தார் என்று பிதேஸ் Fides  செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.