2016-05-05 15:32:00

நான்கில் ஒரு குழந்தை, போர் சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்றது


மே,05,2016. பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளில், நால்வரில் ஒருவர், போர்கள் சூழ்ந்த பகுதிகளில் வாழ்வதால், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி உதவி அமைப்பான UNICEF அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

3 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள், உலகெங்கும் 42 கோடியே 60 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்றும், இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மோதல்கள் நிறைந்த இடங்களில் வாழ்கின்றனர் என்றும் UNICEF அமைப்பு, இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

'நாம் வகுக்கும் திட்டங்களுக்காக கல்வி காத்திருக்க முடியாது' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளவேண்டிய அவசர முயற்சிகளில், கல்வி மிக முக்கியமானது என்று கூறியுள்ளது.

இம்மாதம், 23, 24 ஆகிய நாள்களில் இஸ்தான்புல் நகரில் நடைபெறவிருக்கும் மனிதாபிமான உச்சி மாநாட்டிற்கு ஒரு முன்னேற்பாடாக, இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, UNICEF உயர் அதிகாரி, Josephine Bourne அவர்கள் கூறினார். 

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.