2016-05-05 15:34:00

திருத்தந்தை பிரான்சிஸ், Charlemagne விருதுக்கு தகுதியானவர்


மே,05,2016. சமுதாயத்தின் மையத்திற்கு, நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் மையத்திற்கு மனிதப் பிறவியைக் கொண்டுவரவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு மனசாட்சியின் குரலாக செயலாற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலக Charlemagne விருதுக்கு மிகவும் தகுதியானவர் என்று, திருப்பீடத்தில், ஜெர்மன் அரசின் சார்பாக பணியாற்றும் தூதர் Annette Schavan அவர்கள் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உயர்ந்த விருதான Charlemagne விருதை, மே 6, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெறவிருப்பதையொட்டி, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் Schavan அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு, நவம்பரில் Strasbourg நகரில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை அவர்கள் உரை வழங்கியபோது, "பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, மனிதப் பிறவியின் புனிதம் என்ற அசைக்கமுடியாத உரிமையின் அடிப்படையில் ஐரோப்பா கட்டியெழுப்பப்பட வேண்டும்" என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டது, இந்த விருதை அவர் பெறுவதற்கு ஓர் அடிப்படை காரணமாக அமைந்தது என்று, Schavan அவர்கள் கூறியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை, 'இறைவா உமக்கே புகழ்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள திருமடல், லாம்பதூசா தீவுக்குச் சென்றது, புலம் பெயர்ந்தோர் மீது அவர் காட்டும் அக்கறை என்று பல காரணங்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு Charlemagne விருது வழங்கப்படுகிறது என்று ஜெர்மன் தூதர் Schavan அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விருதினைப் பெறும் இரண்டாவது திருத்தந்தை என்றும், ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பிற்காக உழைத்த, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களுக்கு, 2004ம் ஆண்டு, இவ்விருது வழங்கப்பட்டது என்றும் ஜெர்மன் தூதர் Schavan அவர்கள் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல பிரச்சனைகள், குறிப்பாக, புலம் பெயர்ந்தோர் பிரச்சனை, ஐரோப்பிய நாடுகளிடையே கருத்து வேற்றுமைகளை உருவாக்கி வரும் வேளையில், ஐரோப்பிய நாடுகளின் ஒருமைப்பாட்டினை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, Charlemagne விருது வழங்கப்படுவது பொருத்தமே என்று Schavan அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.