2016-05-05 15:01:00

"கண்ணீரைத் துடையுங்கள்" திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை


மே,05,2016. மே 5, இவ்வியாழன்  மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் திருவிழிப்பு வழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, "கண்ணீரைத் துடையுங்கள்" என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த வழிபாட்டில், துயரங்களைச் சந்தித்த மூவர் தங்கள் வாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

தங்கள் மகன் தற்கொலை செய்துகொண்ட துயரத்தினால் பாதிக்கப்பட்ட Pellegrino குடும்பத்தினர், பாகிஸ்தானின் அடக்கு முறைகளிலிருந்து தப்பித்து, இத்தாலியில் தஞ்சம் அடைந்துள்ள Felix Qaiser என்ற பத்திரிகையாளர், செல்வக் கொழிப்பில் வாழ்ந்தாலும், தவறான பாதைகளில் சென்று, அன்னையின் கண்ணீரால் மனமாறிய இளையவர்களான Maurizio மற்றும் Enzo என்ற இரட்டையர் ஆகியோர் தங்கள் வாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

வாழ்வில் துயரங்களைச் சந்தித்தாலும், மற்றவரின் துயரங்களில் பங்கேற்றுவரும் பத்து பேருக்கு, பாஸ்கா மெழுகு விளக்கிலிருந்து உருவாக்கப்பட்ட செம்மறி உருவங்களை  இவ்வழிபாட்டின் ஒரு பகுதியாக, திருத்தந்தை வழங்குகிறார்.

பாஸ்கா மெழுகை உருக்கி 'இறைவனின் செம்மறி' உருவாக்கப்படும் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட செம்மறியின் திரு உருவங்களை, தெரிவு செய்யப்பட்ட பத்து பேருக்கு, திருத்தந்தை வழங்குகிறார்.

தங்கள் குழந்தையை ஒரு கார்விபத்தில் இழந்த துயரத்தின் நினைவாக, "விண்ணில் குழந்தைகள்" என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ள ஒரு குடும்பத் தலைவர், ருவாண்டா நாட்டின் இனப் படுகொலையில் தன் குடும்பத்தினரை இழந்து, தற்போது, அருள்பணியாளர் பணிக்கென தன்னையே தயாரித்து வரும் ஒரு தியாக்கோன் ஆகியோர் இந்த பத்து பேரில் அடங்குவர்.

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் இந்த திருவிழிப்பு வழிபாட்டில், கண்ணீரின் அன்னை என்று, இத்தாலியின் Syracuse நகரில் வணங்கப்படும் அன்னை மரியாவின் உருவம், மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.