2016-05-04 16:02:00

கூட்டுறவு அமைப்புக்களுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


மே,04,2016. படைப்பற்றலோடும், தாராள உள்ளத்தோடும் கூட்டுறவு அமைப்புக்கள் செயலாற்றுவது, மனித சமுதாயத்தை நலமுள்ளதாக மாற்றும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலியில் இயங்கிவரும் கூட்டுறவு சங்கங்களின் 39வது தேசிய மாநாடு, மே 4, 5 ஆகிய இரு நாட்கள் நடைபெறுவதையொட்டி, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள மாநாட்டு பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, இந்த மாநாடு நடைபெற்ற வேளையில், தான் அந்த மாநாட்டில் பங்கேற்று, உரையாற்றியதை, திருத்தந்தை, இந்தக் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தின் நலிந்த மக்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் முயற்சியால், வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று, திருத்தந்தை தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

குடும்ப வாழ்வை மையப்படுத்தி, அண்மையில் தான் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலை தன் செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம், வேலை ஆகிய இரு அம்சங்களும் இணைந்து செல்லவேண்டியது முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

நடைபெற்றுவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், கூட்டுறவு சங்கங்களின் முயற்சிகள், அதிக நன்மைகளை உருவாக்குவதற்கு தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி, திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.