2016-05-04 16:19:00

அமைதி ஆர்வலர்கள் : 2014ல் நொபெல் அமைதி விருது


மே,04,2016. 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, கைலாஷ் சத்யார்த்தி, மலாலா யூசுப்சாய் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும், சிறார் மற்றும் இளையோரின் அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துச் சிறாரின் கல்வியுரிமைக்காகவும் போராடியவர்கள், போராடி வருபவர்கள். இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி அவர்கள், இந்தியாவிலிருந்து நொபெல் விருதைப் பெற்ற ஏழாவது நபரும், அருளாளர் அன்னை தெரேசாவுக்குப் பின்னர், நொபெல் அமைதி விருதைப் பெற்ற இரண்டாவது நபரும் ஆவார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் அவர்கள், அந்நாட்டின் அப்துஸ் சலாம் (Abdus Salam) அவர்களுக்குப் பின்னர், நொபெல் விருதைப் பெற்ற இரண்டாவது நபராவார். மேலும், இவர் நொபெல் விருதைப் பெற்ற 47வது பெண்ணாகவும், இளம் வயதில் ஒரு நொபெல் விருதைப் பெற்றவராகவும் உள்ளார். 2014ம் ஆண்டில் மலாலாவுக்கு வயது பதினேழு. அவ்வாண்டில், நொபெல் அமைதி விருதுக்கென, 47 நிறுவனங்கள் உட்பட 278 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவ்வெண்ணிக்கை 2013ம் ஆண்டில் 259.

கைலாஷ் சத்யார்த்தி, மலாலா யூசுப்சாய் ஆகிய இருவருக்கும் இவ்விருதை அறிவித்தபோது, நார்வே நொபெல் குழு இவ்வாறு கூறியது. ஓர் இந்துவையும், ஒரு முஸ்லிமையும், ஓர் இந்தியரையும், ஒரு பாகிஸ்தானியரையும் தேர்ந்தெடுத்தோம். ஏனென்றால், இவ்விருவருமே, கல்விக்காகவும், தீவிரவாதத்தை எதிர்த்தும் பொதுவாகப் போராடியவர்கள். நாடுகளுக்கு இடையே உடன்பிறப்பு உணர்வை உருவாக்குபவர்களுக்கும், அமைதி விருது வழங்கப்பட வேண்டுமென்பது, நொபெல் விருதின் காரண கர்த்தாவாகிய ஆல்பிரட் நொபெல் அவர்களின் விருப்பம். மேலும், இவ்விருவருக்கும் 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, இவ்விருதை வழங்கிய Thorbjorn Jagland அவர்கள், சிறார் தொழில்முறை ஒழிப்பு, பெண் கல்விக்கு எதிரான பாகுபாடு ஆகிய இரண்டு கூறுகளும் கவனத்திற்கு எடுக்கப்பட்டன என்றும், 2014ம் ஆண்டில், உலகில் சிறார் தொழிலாளர் 16 கோடியே 80 இலட்சம். இவர்களில் ஆறு கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர் என்றும் கூறினார்.

கைலாஷ் சத்யார்த்தி அவர்கள், 1954ம் ஆண்டு சனவரி 11ம் தேதி, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், விதிஷா (Vidisha) மாவட்டத்தில் பிறந்தார். அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, விதிஷாவிலுள்ள சாம்ராட் அசோக் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னியல் பொறியியலில் இளம்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், high-voltage பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில ஆண்டுகள் போபாலில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர், தனது 11வது வயதில், தன்னுடைய நண்பர் குழுவுடன் சேர்ந்து, நூல் வங்கி ஒன்றைத் தொடங்கினார். 1980ம் ஆண்டில், ஆசிரியர் பணியைத் துறந்து, கொத்தடிமை விடுதலை முன்னணி இயக்கத்தில் பொதுச் செயலராகப் பணியைத் தொடங்கினார். Bachpan Bachao Andolan என்ற குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்கும் இயக்கத்தையும் ஆரம்பித்தார். இந்த இயக்கம், எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிறாரை, பல்வேறு பணிகளிலிருந்து தடுத்து மறுவாழ்வு அமைத்துக் கொடுத்துள்ளது மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.

அதேநேரம், சத்யார்த்தி அவர்கள், சிறார் தொழிலுக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பிலும்(Global March Against Child Labor) பங்கேற்றார். சிறார் தொழிலாளர் மற்றும் கல்விக்கான பன்னாட்டு மையத்தில் (ICCLE) இணைந்து பணியாற்றினார். சத்யார்த்தி அவர்கள், தெற்கு ஆசியாவில் சிறார் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களைத் தரம் காட்டவும், கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற, சுயச்சான்றிதழை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இது தற்போது குட் வீவ் எனப்படுகிறது. பின்னர், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க வேண்டுமென்று, 1980களிலும் 1990களிலும் சொற்பொழிவாற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வுக்கும், வர்த்தகத்திற்குமான விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும், வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் மேம்பாடு ஏற்பட்டது.

கைலாஷ் சத்யார்த்தி அவர்களின் இயற்பெயர் கைலாஷ் ஷர்மா. இவர், ஒருநாள் பள்ளிக்குச் சென்றபோது, தனது வயதுடைய சிறுவன் ஒருவன், ஏக்கத்துடன் தன்னை உற்றுப் பார்த்ததைக் கவனித்தார். அச்சிறுவனின் தந்தை காலணி தைப்பவர். அவரிடம், இச்சிறுவன் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டார் சத்யார்த்தி. அதற்கு அவர், தாங்கள் உழைக்க மட்டும் பிறந்தவர்கள் என்று பதில் கூறினார். இது தன்னை மிகவும் பாதித்ததாகவும், ஏழைக் குழந்தைகளுக்காகத் தான் உழைக்க ஆரம்பித்ததில் அந்நிகழ்வின் பங்கு பெரிது என்றும் கூறியிருக்கிறார் சத்யார்த்தி. இவர் தனது இளம்வயதில், சில விருந்தினர்களை அழைத்திருந்தார். அன்று உணவைச் சமைத்தது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அறிந்ததால், விருந்துக்கு வந்தவர்கள் உணவு உட்கொள்ளாமல் இடையிலேயே சென்று விட்டனர். அந்நிகழ்வால் பாதிக்கப்பட்டு, தன் குடும்பப் பெயரான ஷர்மா என்பதை, சத்யார்த்தி என்று இவர் மாற்றிக்கொண்டார். புதுடெல்லியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் சத்யார்த்தி அவர்கள், தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார்

சிறார் தொழில்முறை ஒரு மனித உரிமைகள் விவகாரம் என்பதை உலகுக்கு உணர்த்தினார் சத்யார்த்தி. அனைவருக்கும் கல்வி என்ற முயற்சிகளோடு சேர்த்து, சிறார் தொழில்முறையை ஒழிப்பதையும் ஈடுபடுத்தினார். யுனெஸ்கோ உட்பட, பல பன்னாட்டு நிறுவனங்களில் உறுப்பினராக உள்ளார் இவர். 2009ல் சனநாயகப் பாதுகாவலர் விருது (அமெரிக்க ஐக்கிய நாடு), 2008ல் Alfonso Comin பன்னாட்டு விருது (இஸ்பெயின்), 2007ல் இத்தாலிய செனட் பதக்கம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நவீன அடிமை முறை ஒழிக்கும் நாயகர் பட்டியலில் இடம்பெறல்.. 2014ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது.. இப்படி பல விருதுகளைப் பெற்றிருக்கின்றார் இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி. “குழந்தைப் பருவம் என்பது எளிமை. உலகை, குழந்தையின் கண்கொண்டு நோக்குவோம். அது அழகானது”. “இப்பொழுது இல்லாவிட்டால் எப்பொழுது?, நீயாக இல்லாவிட்டால் வேறு யார்?, இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல முடிந்தால், மனித அடிமை முறையை ஒழித்து விடலாம்” என்று சொன்னவர் கைலாஷ் சத்யார்த்தி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.