2016-05-03 16:00:00

துன்புறும் பெண்களின் துயர் துடைக்க திருத்தந்தை அழைப்பு


மே,03,2016. “இறைவனின் இரக்கத்தின் மனித உருவான இயேசு கிறிஸ்து, நம்மீது வைத்த அன்பினால், சிலுவையில் இறந்தார் மற்றும் நம்மீது வைத்த அன்பினால் இறந்தோரிடமிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார்” என, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், குடும்பம் தொடங்கி, மனித நடவடிக்கைகளின் அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்கு மறுக்க முடியாதது, இதனை ஏற்பது மட்டும் போதுமா? என்று, தனது மே மாதச் செபக் கருத்துக்களில் கேள்வி எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மாதமும் செபக் கருத்துக்கள் பற்றிய சிந்தனையை, காணொளிச் செய்தி வழியாகப் பகிர்ந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, சோர்விழந்து, ஏன் அடிமைத்தனத்திற்கும் தள்ளப்பட்டு, மிகவும் துன்பநிலையிலுள்ள பெண்களின் துயர் துடைப்பதற்கு நாம் சிறிதளவே ஆற்றியிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.  

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் முழுவதுமாக ஒன்றிணைக்கப்படுவதற்கு, அவர்கள் எதிர்நோக்கும் தடைகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்  திருத்தந்தை.

நான் இப்போது கூறியது சரியென, நீங்கள் தெளிவாக உணர்ந்தால், எனது செபக் கருத்துக்களுடன் இணையுங்கள் என்று அனைவரையும் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நாடுகளிலும் பெண்கள் மதிக்கப்பட்டு, கவுரவப்படுத்தப்படியாகவும், சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றும் முக்கிய பங்கு மதிக்கப்படும்படியாகவும் செபிப்பதே செபக் கருத்து என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.