2016-05-03 15:48:00

கிறிஸ்தவர்க்கு இயேசுவே உண்மையான வழி


மே,03,2016. இயேசுவே உண்மையான வழி என்பதை மறந்து, பலர், கிறிஸ்தவத்தை, ஒரு குழப்பமான வழியில் பின்செல்லுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் கூறினார்.

தேக்க நிலையிலுள்ள அல்லது பாதுகாக்கப்படும் சடலங்கள் போன்ற கிறிஸ்தவர்களும், நிலையற்ற மற்றும் பிடிவாதமான கிறிஸ்தவர்களும், தங்களின் விசுவாசப் பயணத்தில் பாதி வழியிலே நின்றுவிடும் கிறிஸ்தவர்களும் இத்தகைய மக்களுள் உள்ளடங்குவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், நானே வழி என, இயேசு தம் திருத்தூதர்களிடம்  கூறிய நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி வழங்கிய மறையுரையில், பல்வேறு வகையான கிறிஸ்தவர்கள் பற்றி விளக்கினார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்கள், தங்களின் விசுவாசப் பயணத்தில் தடங்கல் இல்லாமல் அல்லது பாதியிலே நின்றுவிடாமல், இயேசுவை இடைவிடாமல் பின்செல்ல வேண்டியதன் அவசியம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, விசுவாசப் பயணத்தில் முன்னோக்கிச் செல்லாமல், பதப்படுத்தப்பட்ட உடல்கள் போன்று இருக்கும் கிறிஸ்தவர்கள் பற்றி முதலில் விளக்கினார்.

ஒவ்வொருவரும் தங்களின் விசுவாசப் பயணம் குறித்து ஒரு ஐந்து நிமிடங்கள் சிந்திப்போம் என, திருப்பலியில் பங்குகொண்டவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தவறுகள் இழைத்து, அங்குமிங்கும் திரும்பிப் பார்த்து, விருப்பமான பொருள்களில் பயணத்தை நிறுத்தி விடுகிறேனா? அல்லது இயேசுவே வழி என, அவரைப் பின்செல்லுகிறேனா? என்று சிந்தியுங்கள் என்றும் கூறினார்.   

சரியான பாதையில் நாம் செல்வதற்கு, தூய ஆவியார் நமக்குக் கற்றுத் தருகின்றார் என்றும், நாம் சோர்வடையும்போது, சிறிது ஓய்வெடுத்து, பின்னர் மீண்டும் முன்னோக்கிச் செல்வோம், இதற்கு இறையருளை மன்றாடுவோம் என்றும் கூறி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.