2016-05-03 16:17:00

உலக ஊடக சுதந்திர நாள் மே 03


மே,03,2016. மனித உரிமைகள், சனநாயகச் சமூகங்கள், உறுதியான வளர்ச்சி ஆகியவை, தகவல்கள் சுதந்திரமாகப் பரிமாறப்படுவதைச் சார்ந்துள்ளவேளை, தகவல் பெறும் உரிமை, ஊடகச் சுதந்திரத்தைச் சார்ந்துள்ளது என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மே,03, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக ஊடக சுதந்திர நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், மனித உரிமைகள், சனநாயகம், உறுதியான வளர்ச்சி ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்தவும், ஊடகத்துறையின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், தங்கள் பணியின்போது உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்களைக் கவுரவிக்கவும் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

சுதந்திரமாகத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் உலகில் கொண்டுவரப்பட்டதன் 250ம் ஆண்டு நிறைவு, ஊடகச் சுதந்திரக் கோட்பாடுகள் பற்றிய Windhoek அறிக்கை அமலுக்கு வந்ததன் 25ம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டும், இவ்வாண்டு உலக ஊடக சுதந்திர நாளோடு ஒன்றிணைந்து கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

அதோடு, உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகள் அமல்படுத்தப்படும் முதல் ஆண்டும், இந்த 2016ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஊடகச் சுதந்திரத்தை மதிக்குமாறு, அரசுகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குடிமக்களைக் கேட்டுள்ள பான் கி மூன் அவர்கள், அடிப்படை உரிமையான ஊடகச் சுதந்திரமின்றி, குடிமக்கள் சுதந்திரமாக வாழ இயலாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஃபின்லாந்து நாட்டின் ஹெல்சின்க்கியில், இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக ஊடகச் சுதந்திர நிகழ்வில், அஜெர்பைஜான் வானொலி ஊடகவியலாளர் Khadija Ismaliyova அவர்கள், யுனெஸ்கோ Guillermo Cano ஊடகச் சுதந்திர விருதைப் பெறுகிறார். இவர் சிறையில் இருப்பதால், இவரால் இவ்விருதை நேரிடையாகப் பெற முடியவில்லை.   

1986 டிசம்பர் 17ம் தேதி, கொலம்பியப் பத்திரிகையாளர் Guillermo Cano, அவரது அலுவலகம் முன்பாக படுகொலை செய்யப்பட்டார். இவர் நினைவாக இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.