2016-05-03 16:10:00

இறை இரக்கத்தில் தொடர்ந்து ஊன்றியிருக்க வலியுறுத்தல்


மே,03,2016. எண்ணூறு ஆண்டுகளாகத் திருஅவைக்குப் பணியாற்றிவரும் Mercedarians என்றழைக்கப்படும், இரக்கத்தின் அன்னை மரியா சபையினர், தங்களின் மரபுக்கு விசுவாசமாக இருந்து, புதுப்பித்தலுக்கு எப்பொழுதும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இரக்கம் : சுதந்திரத்தின் எல்லைகளில் நினைவும், இறைவாக்கும்” என்ற தலைப்பில், பொதுப்பேரவையை நடத்திவரும் இரக்கத்தின் அன்னை மரியா சபையினரின்  பிரதிநிதிகளை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இச்சபையினர், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றும் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கடவுள் நம் வாழ்வில் பிரசன்னமாக இருந்தால், அவரின் நற்செய்தியை எடுத்துச் செல்வதில் கிடைக்கும் மகிழ்வு, நம்  வலிமையும், மகிழ்வுமாக அமையும் என்றும் கூறினார்.

திருஅவைக்குள்ளும், சமூகத்திலும் பணியாற்றுவதற்காக, கடவுள் அழைத்துள்ளார் என்றும், இச்சபையினர் ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றும்போது, பிணையல் கைதிகள் போல் ஆகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1218ம் ஆண்டில், இஸ்பெயினில், புனித பீட்டர் நொலாஸ்கோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட  இரக்கத்தின் அன்னை மரியா சபையினர், இந்தியா உட்பட 17 நாடுகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள், ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளுடன், பிணையலிலும், விசுவாசத்தை இழக்கும் ஆபத்திலும் உள்ளவர்களுக்காகத் தங்கள் வாழ்வைக் கையளிக்கும் நான்காவது வார்த்தைப்பாட்டையும் எடுக்கின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.