2016-05-02 13:50:00

வாரம் ஓர் அலசல் – நிறத்தால், இனத்தால் புறக்கணிப்பு வேண்டாமே


மே,02,2016. இந்தியாவின் ஜாம்ஷெட்பூரில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ஜோதி சௌத்ரி. இவரை மணக்க விரும்பிய மணமகன், இவர், கருப்பாக இருப்பதால், வரதட்சணை அதிகமாகக் கேட்டிருக்கிறார். அதனால் அந்த ஆணை மணந்துகொள்ள மறுத்துள்ளார் ஜோதி. இந்தியாவில் வரதட்சணை, ஒரு சமூகப் பிரச்சனையாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், படித்து நல்ல வேலையிலுள்ள இந்தப் புதுமைப் பெண், அந்த நபரை, தான் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதை, கடந்த வாரத்தில், 'கருப்பே அழகு' என, தனது முகநூலில் எழுதியுள்ள ஜோதி சௌத்ரி அவர்கள், தனது தோலின் நிறத்துக்காக பணம் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருக்கின்றார். ஜாம்ஷெட்பூரில், நிறத்தின் அடிப்படையில், வரதட்சணை கோரி வாழும் சமுதாயம், நடைமுறைக்கு ஒவ்வாத மாறுபட்ட ஓர் உலகத்தில் வாழ்கின்றது என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது எனவும், ஜோதி சௌத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார். அதேநேரம், தனக்கு கணவர் கிடைப்பது ஒருபோதும் சந்தேகத்துக்கு இடமானதாக இருக்காது எனவும், தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் ஜோதி சௌத்ரி. இவரது இந்த முகநூல் பதிவை, இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் விரும்பியுள்ளனர். மக்களின் தோல் நிறத்தை வைத்து, இருண்ட கண்டம் என்று, ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஆப்ரிக்காவிலும், 'கருப்பே அழகு' எனும் பிரச்சாரங்கள், தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், தோலின் நிறம், சாதனைகளுக்கும், நற்பண்புகளுக்கும் எந்த விதத்திலும் தடங்கலாக இல்லை என்பது போல், கடந்த வாரத்தில் (ஏப்ரல் 22) ஒரு செய்தி வெளியானது.   

ஹரியட் டப்மேன் (Harriet Tubman) என்ற ஆப்ரிக்க-அமெரிக்க கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவப்படம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் இருபது டாலர் பணத்தாளில் முதல் முறையாக இடம்பெறவுள்ளது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், Harriet Tubman அவர்களை, அடிமையாக வைத்திருந்தவரும், பின்னர் அந்நாட்டின் அரசுத்தலைவராகவும் இருந்த ஆன்ட்ரூ ஜாக்ஸ்சன் (Andrew Jackson) அவர்களின் உருவப் படத்துக்குப் பதிலாக, இவரது உருவப்படம், இருபது டாலர் தாளில் இடம்பெறவிருக்கிறது. அவ்வகையில், ஒரு நூற்றாண்டில், முதல் முறையாக ஒரு பெண்ணின் உருவப்படத்தை டாலர் பணத்தாளில் அமெரிக்கக் குடிமக்கள் காணவிருக்கின்றனர். இருபது டாலர் தாளின் புதிய வடிவமைப்புகள் 2020ம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1890களில் ஒரு டாலர் தாளில், மார்த்தா வாஷிங்டன் என்பவரின் உருவப்படம் இருந்தது. முன்னாள் அடிமையாகிய Harriet அவர்கள், அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்படப் போராடியவர், மனிதாபிமான ஆர்வலர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, உளவாளியாகச் செயல்பட்டவர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த ஆப்ரிக்கப் பெற்றோர்க்குப் பிறந்த  Harriet Tubman அவர்கள், தனது குழந்தைப் பருவத்தில், பல்வேறு வெள்ளையின முதலாளிகளிடம் கசையடிகளை வாங்கியவர். ஒரு சமயம், ஓர் அடிமை மற்றோர் அடிமை மீது வீசிய பளுவான இரும்புத் துண்டு, இவர் தலை மீது விழுந்ததால், பலமாகக் காயமடைந்தார். இக்காயத்தால் இவர் தனது வாழ்நாள் முழுவதும் வேதனையாலும், ஒழுங்கான தூக்கமின்மையாலும் துன்புற்றார். ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ்ந்த இவர், வியப்பான காட்சிகளையும், கனவுகளையும் கண்டார். இவை, கடவுளிடமிருந்து வந்ததாக இவரே கூறியிருக்கிறார். 1849ம் ஆண்டு பிலடெல்பியாவுக்குத் தப்பித்துச் சென்ற இவர், தனது குடும்பத்தினரை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காக, மீண்டும் மேரிலாண்ட் சென்றார். அடிமைகளை மீட்பதற்காக ஏறத்தாழ 13 பணித்தளங்களை அமைத்தார். அடிமைத்தனத்திற்கெதிரான நடவடிக்கைகள் வழியாக, அடிமைத்தனத்தில் சிக்கிய ஏறக்குறைய எழுபது குடும்பங்களையும், நண்பர்களையும் மீட்டார். மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட அடிமைகள் மீட்கப்பட இவர் உதவினார். 1913ம் ஆண்டில், Tubman அவர்கள் இறந்த பின்னர், அமெரிக்காவில், துணிச்சல் மற்றும் விடுதலைக்கு எடுத்துக்காட்டான ஒரு பெண்ணாகப் போற்றப்பட்டார். அமெரிக்க இருபது டாலர் தாளில், அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜாக்ஸ்சன் (Andrew Jackson) அவர்களின் படத்துக்குப் பதிலாக, இவரது உருவப்படம் இடம்பெறும் என்று, 2016ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, அமெரிக்க அரசு பொது வருவாய்த் துறை அறிவித்து, இந்தப் பெண் மனித உரிமைப் போராளியைப் பெருமைப்படுத்தியுள்ளது. 

அன்பு நெஞ்சங்களே, உலகின் பல நாடுகளில் மே தினம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வரலாற்றுப் பின்னணியில், பல ஒடுக்கப்பட்டவர்களின் குருதி ஆறு ஓடுகின்றது. 1886ம் ஆண்டு, மே முதல் தேதி, சிகாகோ தெருக்களில், தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தைத் துவக்கினர். அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டது. துப்பாக்கிகளின் முனையில் மக்களின் இரத்தம் சிந்தச் சிந்த, போராட்டம் நசுக்கப்பட்டது. 1888ம் ஆண்டில் கூடிய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு, மே முதல் தேதியன்று, பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. 1889ம் ஆண்டில் பிரான்சில் கூடிய உலகப் பொதுவுடைமைத் தலைவர்கள், மே முதல் தேதி அன்று உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். 1890ம் ஆண்டு முதல், மே முதல் தேதி, உலகம் முழுவதும் போராட்டங்களால் நிரம்பப் பெற்று பன்னாட்டு தினமாக அடையாளம் பெற்றது.  

அன்பர்களே, இந்த மே தினம், கொண்டாடப்படுவதற்கு அல்ல, போராடுவதற்கே. மே தினம், இந்தப் பூமியில் துன்பத்தில் வாழும் எல்லா மனிதர்களின் நாள். அவர்களின் போர்க்குரல் ஒலித்த நாள். முதலாளித்துவத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை எச்சரிக்கும் நாள். அதிகாரப் பீடங்கள் இன்று ஆரவாரமாக இருக்கலாம். நமது அமைதி, புயலை உருவாக்கக்கூடியது என்பது, அவர்களுக்கு இப்போது தெரியாது. அமெரிக்காவில் Haymarketல் அமைக்கப்பட்டுள்ள நினவுச் சின்னத்தில், தொழில் அதிபர்களின் சப்தங்களைவிட எங்கள் அமைதி சக்தி வாய்ந்ததாக மாறும் ஒருநாள் வரும்’ என்று செதுக்கப்பட்ட வார்த்தைகள் கல்லில் தவமிருக்கின்றன என்று, எழுத்தாளர் மாதவராஜ் அவர்கள் சொல்லியிருக்கிறார். நிறத்தால், இனத்தால், சமூக நிலையால், ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்கள் விழித்தெழுந்து வருகின்றனர் என்பதற்கு ஜாம்ஷெட்பூர் ஜோதி ஓர் எடுத்துக்காட்டு. இத்தகைய புதுமைப்பெண்களின் துணிச்சலும், வீரமும் காலத்தால் வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் என்பதற்கு, அமெரிக்க முன்னாள் அடிமைப் பெண் Tubman அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், இன்றும், மதம், இனம்,மொழி போன்ற பாகுபாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். நவீன உலகில், எத்தனை கவுரவக் கொலைகள்! பாகிஸ்தான் நாட்டில், கவுரவக் கொலைகள் என்ற பெயரில், ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பெற்றோரால் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழகத்திலும் இக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆயினும், ஏழை எளியவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்களின் வீரச் செயல்கள், அன்புப் பணிகள், பல நேரங்களில், இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள டக்ளஸ் நகரில், உணவகம் ஒன்றில், ஒருவர் உணவருந்தச் சென்றார். தனக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். உணவும் மேஜைக்கு வந்தது. ஆனால் உணவருந்த வந்த அந்த நபருக்கு இரு கைகளும் இல்லை. அதனால் எவரேனும் ஒருவர் ஊட்டிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த உணவகத்தில் இருந்த எவரும் உடனடியாக முன்வரவில்லை. இந்நிலையில், திடீரென்று அந்த உணவகத்தின் ஊழியர் அலெக்ஸ் அவர்கள், அந்த நபருக்கு உதவ முன்வந்தார். குறிப்பிட்ட நபர் திருப்தியாகச் சாப்பிட்டு முடிக்கும்வரை அவருக்கு உணவை ஊட்டி விட்டார் அலெக்ஸ். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், தனது புகைப்படக் கருவியில் பதிவுசெய்து, அதை இணையத்தளத்தில் பதிவேற்றி, மனிதத்தன்மை இன்னும் சாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் வாழும் Bipin Ganatra அவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்காதவர். அதனால் இவர், சணல் வர்த்தகம் செய்வது, அறுந்துபோன மின்கம்பிகளை இணைத்துக் கொடுப்பது என, கிடைக்கும் சாதாரண வேலைகளைச் செய்து வருகிறார். ஆனால், இவர் வேலை நேரம் போக, மீதி நேரங்களில், ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் வாழும் கொல்கத்தாவில், தீயணைக்கும் வேலையை, தன்னார்வலராகச் செய்து வருகிறார். 59 வயது நிரம்பிய Ganatra அவர்கள் சொல்கிறார் – தீ, சிவப்பு மற்றும் நீலநிறத்தில் எரியும். நீலநிறம் என்றால், நச்சுவாயு கலந்தது என்று அர்த்தம். நான் தீயணைப்புக்கு எதுவும் முறையாகப் படிக்கவில்லை. ஆனால் என்னால் முடிந்த உதவிகளை இந்நகரத்தில் செய்து வருகிறேன் என்று. இவர், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, வீடுகளில் தீயை அணைப்பது, மக்களைக் காப்பாற்றுவது மற்றும் வீடுகளில் சேதமடைந்த பொருள்களை அகற்றுவது போன்ற பணிகளை ஆற்றி வருகிறார். அன்பு நெஞ்சங்களே, நிறத்தால், இனத்தால், உடல் தோற்றத்தால், பணத்தால் யாரையும் ஒதுக்காமல் வாழ்வோம். உன்னத வாழ்வுக்கு அதிகம் கற்றுத்தருபவர்கள் இந்த மாமனிதர்களே.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.