2016-05-02 15:59:00

அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை விண்ணப்பம்


மே,02,2016. சிரியாவில், குறிப்பாக, அலெப்போ நகரில், மேலும், மேலும் இடம்பெற்றுவரும் துன்பகரமானச் சூழல்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் சிரியாவில், குழந்தைகள், முதியோர், பிறருக்கு உதவி செய்வோர் என பல்வேறு தரப்பினரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என, இஞ்ஞாயிறன்று தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

மே தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, பொருளாதார வளர்ச்சி என்பது, மனித மாண்பை கணக்கில் எடுப்பதுடன், தொழில் சட்டங்களை முற்றிலும் மதிப்பதாகவும் அமைய வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

குழந்தைகளை பாலின முறையில் தவறாக நடத்துவோர் எவராக இருப்பினும், அவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.