ஏப்.30,2016. அன்பு நெஞ்சங்களே, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டில், பல்வேறு பணிகளை ஆற்றுபவர்கள் மற்றும் பலதரப்பட்ட வயதினர்க்கென
யூபிலி விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல், 30 இச்சனிக்கிழமையன்று, இராணுவ
மற்றும் காவல்துறையினரின் யூபிலி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, ஏறக்குறைய
எண்பதாயிரம் பேர் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்தனர். இவர்களில் ஏறத்தாழ
ஒன்பதாயிரம் பேர், உலகில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு ரோட்டரி அமைப்பைச்
சார்ந்தவர்கள். மேலும், இருபதாயிரம் பேர் இராணுவ மற்றும் காவல்துறையினர். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் திறந்த வாகனத்தில், வத்திக்கான் வளாகத்தில் வந்தபோது, இராணுவத்தினரின்
இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்தன. கடவுளோடு ஒப்புரவாகுங்கள்(2கொரி.5,20-21) என்று,
பவுலடிகளார் கொரிந்து மக்களுக்குக் கூறிய அறிவுரை, இந்த யூபிலி நிகழ்வில் முதலில் வாசிக்கப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஒப்புரவை மையப்படுத்தி உரை வழங்கினார். அன்புச் சகோதர,
சகோதரிகளே, இரக்கத்தின் முக்கிய கூறாகிய ஒப்புரவாதல் பற்றிய சிந்தனைகளை இன்று வழங்க விரும்புகிறேன்
என்று மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், கிறிஸ்துவோடு ஒப்புரவாகுங்கள் (2கொரி.5,20)
என்ற தூய பவுலடிகளாரின் அழைப்பை கடைப்பிடிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் தொடர்ந்து
தமது மன்னிப்பை நமக்கு வழங்குகிறார். நம் பாவநிலையில், அவரின் அருளைச் சுதந்திரமாக ஏற்பதன்
வழியாக மட்டுமே, அவரிடம் திரும்பிச் செல்ல முடியும். இதற்கு, அவர், தம் மகன் இயேசுவை
நமக்கு அளித்துள்ளார். இயேசுவின் சிலுவை, நம்மை, இறைத்தந்தையிடம் மீண்டும் நடத்திச் செல்லும்
பாலமாக அமைந்துள்ளது. நாம் ஒவ்வொருவரும், ஒப்புரவு எனும் இலவசக் கொடையை ஏற்பதற்கு ஏற்ற
காலம், இந்தப் புனித ஆண்டாகும். நம் சமூகங்களில் இதனை ஏற்று, நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு,
இதனை எடுத்துச் செல்வோம். கடவுளோடு ஒப்புரவாகும்போது, நம் அகத்திற்குச் சுகமும், அமைதியும்
கிடைப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்திற்குள், ஒவ்வொரு நிலையிலும், ஒப்புரவுக்காக உழைப்பதற்கு
நம்மைத் தூண்டுகிறது. அதோடு, உலகளாவிய அமைதி, நீதி, மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும்
உதவுகிறது. இக்காரணத்தினால், உலகெங்கிலுமிருந்து இன்று நம்மோடு இருக்கின்ற, இராணுவத்தினர்
மற்றும் காவல்துறை உறுப்பினர்களை, சிறப்பாக வரவேற்பதில் மகிழ்கின்றேன். அன்பு நண்பர்களே,
உங்களின் சவால் நிறைந்த பணி, எல்லாவற்றுக்கும் மேலாக, சமுதாயத்தில், அமைதி, பாதுகாப்பு
மற்றும் ஒப்புரவுக்குப் பணியாற்றுவதாகும். நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் கலவரங்களில்
ஒருபோதும் சோர்வடைந்து விடாதீர்கள். மாறாக, விசுவாசத்திலும், கடவுளின் அன்பு உதவியின்
நம்பிக்கையிலும் எப்போதும் வளருங்கள். இவ்வாறு, அன்பு, தீமையையும், அமைதி, வன்முறை மற்றும்
போரையும் வெற்றி கொள்கின்றன என்ற உறுதிப்பாட்டுடன், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளங்களாக
நீங்கள் இருப்பீர்கள்.
இவ்வாறு, தனது சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், கானடா, கென்யா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
உட்பட, பல நாடுகளிலிருந்து இதில் கலந்துகொண்ட இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை வாழ்த்தினார்.
நம் தந்தையாம் கடவுளின் அன்பிரக்கம், திருப்பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களில்
பொழியப்படச் செபித்தார். பின்னர் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |