2016-04-30 13:29:00

இது இரக்கத்தின் காலம்: உலக அமைதி நம்மிடமிருந்து துவங்கட்டும்


"Waging Peace", அதாவது, "அமைதிக்காகப் போரிடுதல்" என்ற தலைப்பில், அருள்பணி Ron Rolheiser அவர்கள் எழுதியுள்ள கருத்துக்களில் சில:

"நம் குடும்பங்களில், திருமணங்களில் உறவுகள் முறிந்து, வன்முறைகள் நிலவும்போது, உலக அரசுகள் நடுவே, வன்முறையற்ற உறவுகள் நிலவவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நம் வாழ்வில் ஏற்பட்ட பழையக் காயங்களை மன்னித்து, முன்னோக்கிச் செல்ல மனமில்லாதபோது, நாடுகளிடையே உருவான வரலாற்றுக் காயங்களை மறந்து, அரசுத் தலைவர்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நம் குடும்பங்களில், சுற்றங்களில், நமக்கு அடுத்திருக்கும் சூழல்களில் உண்மையானத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு அறிந்தபோதிலும், நம் உடல் தோற்றம், முக அழகு என்ற வெளிப்பூச்சுக்களுக்கு நாம் அதிகம் செலவழிக்கிறோம். இந்நிலையில், அரசுகள், உலக அரங்கில் தங்கள் வெளித் தோற்றத்தைப் பாதுகாக்க, இராணுவத்திலும், படைக் கருவிகளிலும் செலவு செய்வதை நாம் கேள்வி கேட்கக் கூடாது.

எனவே, "அமைதிக்காகப் போரிடுதல்" என்பது, அரசுகள் என்ன செய்யவேண்டும், செய்யக் கூடாது என்பனவற்றில் ஆரம்பமாவதில்லை. நாம் வளர்த்துக்கொள்ளும் பேராசை, மன்னிக்க மறுக்கும் மனநிலை, அணியவிரும்பும் முகமூடிகள் ஆகியவற்றில் ஆரம்பமாகவேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள அரசுகள், நிறுவனங்கள், அமைப்பு முறைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதைவிட, நம்மில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே முக்கியம்."

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றங்கள், முதலில் உன்னில் நிகழட்டும்" "Be the change that you wish to see in the world" என்று, மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.