2016-04-30 14:13:00

அலெப்போவின் அமைதிக்காக அன்னை மரியாவிடம் செபம்


ஏப்.30,2016. போரும், வன்முறையும் நிறைந்த தீய ஆவியின் நகரமாக அலெப்போ மாறியுள்ளது, அமைதிக்காக அன்னை மரியாவிடம் செபிக்கின்றோம் என்று, அந்நகரின் அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

சிரியாவின் அலெப்போ நகரின் தற்போதைய நிலை குறித்து, இச்சனிக்கிழமையன்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் இப்ராஹிம் அல்சாபாக்(Ibrahim Alsabag) அவர்கள், சிரியாவின் வடக்கிலும், அந்நாட்டின் இரண்டாவது மிக முக்கிய நகரமான அலெப்போவிலும், கடந்த ஒரு வாரமாக, சண்டை கடுமையாக இடம்பெற்று வருகிறது என்று கூறினார்.

அலெப்போ மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், பள்ளிகளும், கடைகளும் மூடப்பட்டுள்ளன, சிறார் வெளியே செல்லாமல் வீடுகளில் உள்ளனர், தெருக்கள் காலியாக உள்ளன என்றுரைத்த அருள்பணி Alsabag அவர்கள், குண்டுகள் எந்நேரத்திலும் விழலாம் என்ற அச்சத்தில் மக்கள் கதிகலங்கி உள்ளனர் என்றும் கூறினார்.

சிரியாவில் வன்முறையும், பேரச்சமும் முடிவில்லாதவைகளாக உள்ளன என்றும், அந்நாட்டில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய சண்டையில் குறைந்தது இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும், இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.