2016-04-29 15:19:00

அலெப்போ மருத்துவமனை தாக்குதல், மன்னிக்க முடியாத குற்றம்


ஏப்.29,2016. சிரியாவில் புரட்சியாளர்களின் ஆக்ரமிப்பிலுள்ள அலெப்போ நகரில் மருத்துவமனை ஒன்று, இவ்வியாழனன்று குண்டு வைத்து தாக்கப்பட்டது, மன்னிக்க முடியாத குற்றம் என்று சொல்லி, அதற்கெதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

அலெப்போவில், எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அரசு-சாரா அமைப்பு நடத்தும் இம்மருத்துவமனை மீது வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், சிறார், மருத்துவர்கள் மற்றும் நோயாளர்கள் என, குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அம்மருத்துவமனை பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மீறுவதாய் அமைந்துள்ளது என்றும், இக்குற்றத்தை நடத்தியவர்கள், சட்டத்தின் முன்பாக பதில் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் பான் கி மூன். 

அலெப்போ நகரில் கடந்த ஆறு நாள்களாக நடத்தப்பட்டு வரும் வான் தாக்குதல்களில், 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தடுமாறிக்கொண்டிருக்கும் சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் காப்பாற்ற, அமெரிக்க ஐக்கிய நாட்டையும் இரஷ்யாவையும் கேட்டிருக்கிறார் சிரியாவுக்கான ஐ.நா. தூதுவர். சிரியாவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அண்மை நாள்களில் அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.