2016-04-28 16:04:00

பசுமைச் சூழல் நிதிக்கு அமெரிக்கா 75 கோடி டாலர் ஒதுக்குமாறு


ஏப்ரல்,28,2016. பசுமைச் சூழலை உருவாக்கும் நிதிக்கு அமெரிக்க அரசு இன்னும் கூடுதலானத் தொகையை அளிக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை விண்ணப்பித்துள்ளது.

பசுமைச் சூழல் நிதிக்கு 50 கோடி டாலர்கள் நிதியை வழங்கியுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவரின் வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து, 120க்கும் மேற்பட்ட பல்சமய அமைப்புக்கள் விடுத்துள்ள ஒரு விண்ணப்பத்தில் அமெரிக்க ஆயர் பேரவையும் இணைந்துள்ளது.

இந்த விண்ணப்பத்தின்படி, இவ்வாண்டு 50 கோடி டாலர்கள் வழங்கியுள்ள அமெரிக்க அரசு, வரும் ஆண்டில் இந்த உதவித் தொகையை 75 கோடியாக உயர்த்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் வளரும் நாடுகள் முழுமையாக ஈடுபட 300 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பாரிஸ் உலக உச்சி மாநாட்டின் இறுதியில், வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள், இன்னும் பத்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுக்காப்பிற்கென 10,000 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்க மேற்கொண்ட முடிவின் காரணமாக, இதுவரை 1000 கோடி டாலர்கள் வழங்கியுள்ளன என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.