2016-04-27 16:08:00

துன்புறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் செப நாள் மே 5


ஏப்.27,2016. “கிறிஸ்தவ நம்பிக்கை, கடவுள் நமக்கு வழங்கும் கொடையாகும். நாம் நம்மிலிருந்து வெளிவந்து, நம் இதயங்களைக் கடவுளுக்குத் திறந்தால், அக்கொடை நமக்குக் கிடைக்கும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிடப்பட்டது. 

இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், “ஆண்டவர் முத்திரையிடப்பட்ட நம் கல்லறைகளில் நுழைந்து, நமக்கு வாழ்வளிக்கும்படியாக, அக்கல்லறைகளை, அவருக்குத் திறப்போம், அக்கல்லறைகள் என்ன என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்ற வார்த்தைகள் வெளியிடப்பட்டன.

மேலும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், உடலிலும், உள்ளத்திலும் துன்புறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் செப நாள் வருகிற மே மாதம் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மே 5ம் தேதி வியாழன் மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், திருவிழிப்பு செப வழிபாடு நடைபெறும்.

அந்நாளில், சிராகூசா நகரின், கண்ணீர் அன்னை மரியா திருஉருவத்தின் திருப்பண்டம் விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Angelo Iannuso மற்றும் Antonina Giusto என்ற இளம் தம்பதியரின் படுக்கையறையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருஇதயப் படத்திலிருந்து, 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதிக்கும், செப்டம்பர் முதல் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில், கண்ணீர் வடிந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.