2016-04-27 15:56:00

இது இரக்கத்தின் காலம்... – சமநிலையில் இருக்கிறேன்


ஓர் ஊரில் ஓர் இசைக்கலைஞர் இருந்தார். அவரிடம் நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கேயுரிய சில தீய பழக்கங்களும் இருந்தன. தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார் அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார். அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப் பலவாறு அவரை வசைபாடினார். அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர் அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார். அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள் வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம் புரியும்!’ என்றார். அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர், புகழ்ந்தவர், என இருவருமே குழம்பினார்கள். என்ன இது, இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால் இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர். ‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா? இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர். ‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன். எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன் என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவுகோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம் இல்லை. அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே! அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனம் என்பது அவரவர் கண்ணோட்டம்தான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.