2016-04-27 16:44:00

அமைதி ஆர்வலர்கள் : 2013ல் நொபெல் அமைதி விருது(OPCW)


ஏப்.27,2016. OPCW(Organisation for the Prohibition of Chemical Weapons) என்ற, வேதிய ஆயுதங்களைத் தடை செய்யும் நிறுவனத்திற்கு, 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இது, வேதிய ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தை(CWC) அமல்படுத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த ஒப்பந்தம், ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு, 1992ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி, ஐ.நா. பொது அவை இசைவு தெரிவித்தது. அதன் பின்னர், 1993ம் ஆண்டு சனவரி 13ம் தேதி, ஐ.நா. பொதுச் செயலர், பாரிசில், நாடுகளின் கையெழுத்துக்கு இதனைச் சமர்ப்பித்தார். 1997ம் ஆண்டில் 165 நாடுகள் இதில் கையெழுத்திட்டன. அதனால், அவ்வாண்டில் இது அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, OPCW நிறுவனத்திற்கு,  வேதிய ஆயுத உற்பத்தியை மதிப்பீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதோடு, ஒரு நாட்டில் இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன என்று, அறிய வந்தால், அதன் அடிப்படையில், அவற்றைப் பரிசோதனை செய்யவும் OPCW நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், வேதிய ஆயுதங்கள் போரில் பயன்படுத்துவதை ஒட்டுமொத்தமாக தவிர்க்கும் பொறுப்பை ஏற்கின்றன. இதன் வழியாக, உலக அளவில் பாதுகாப்புக்கும் உறுதி செய்கின்றன.

வேதிய ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில், நான்கு முக்கிய கூறுகள் உள்ளன. சேமிப்பில் உள்ள அனைத்து வேதிய ஆயுதங்களும் அழிக்கப்பட வேண்டும். புதிய ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில், வேதியத் தொழிற்சாலைகள் மேற்பார்வையிடப்பட வேண்டும். வேதிய ஆயுதப் பயன்பாட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். வேதியப் பொருள்களை அமைதிக்கான வழிகளில் செலவழிக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக, 2015ம் ஆண்டு செப்டம்பரில் 192 நாடுகள் இசைவு தெரிவித்தன. இஸ்ரேல் நாடு இதில் கையெழுத்திட்டது, ஆனால் அமல்படுத்தவில்லை. எகிப்து, வட கொரியா, பாலஸ்தீனம், தென் சூடான் ஆகிய நாடுகள், கையெழுத்திடவும் இல்லை, அமல்படுத்தவுமில்லை. 2015ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, அங்கோலா நாடு, தனது ஆயுதங்களை CWC ஒப்பந்தத்தின்படி செயல்படுவதாக அறிவித்தது. உலகில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட 72,525 மெட்ரிக் டன் வேதியப் பொருள்களில், ஏறக்குறைய 90 விழுக்காடு, 2015ம் ஆண்டு அக்டோபரில் அழிக்கப்பட்டுவிட்டன. 4,913 தொழிற்சாலைகள் மேற்பார்வைக்கு உட்பட்டுள்ளன. 8,612 வேதிய ஆயுதத் தொடர்புடைய மற்றும் 2,597 தொழிற்சாலைகளில், 6,194 கண்காணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.  

OPCW நிறுவனம், தனது 192 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, வேதிய ஆயுதங்கள் இல்லாத ஓர் உலகை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகிறது. வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதையும், அவற்றை அழிக்கவும் வலியுறுத்தும் உலக ஒப்பந்தம், அமல்படுத்தப்படுவதைக் கண்காணித்து, ஊக்குவித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, உறுப்பு நாடுகளை மதிப்பீடு செய்கின்றது மற்றும் நாடுகளின் ஆயுத இடங்களுக்கே சென்று, பார்வையிடுகிறது. OPCW நிறுவனத்தின் நிர்வாக அமைப்புமுறை, CWC வேதிய ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் கருத்தரங்கை நடத்துகின்றது. இதில் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் சம ஓட்டுரிமை உண்டு. அந்நிறுவனம் சார்ந்த அனைத்து முக்கிய தலைப்புக்களையும் இக்கருத்தரங்கு தீர்மானிக்கின்றது. OPCW நிறுவனம்,  ஐ.நா.வின் கீழ் இயங்கும் நிறுவனம் அல்ல. ஆயினும், கொள்கை அளவிலும், நடைமுறை விவகாரங்களிலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் ஒத்துழைக்கிறது. ஐ.நா.வும், OPCW நிறுவனமும் சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து, 2000மாம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. OPCWன் தலைமை அலுவலகம், நெதர்லாந்து நாட்டின் ஹாக் நகரில் அமைந்துள்ளது.

2013ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது, OPCW நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இதனை அறிவித்த, நார்வே நொபெல் விருதுக் குழுத் தலைவர் Thorbjørn Jagland அவர்கள் கூறுகையில், "வேதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவது, அனைத்துலகச் சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட்டுள்ளது, வேதிய ஆயுதங்களை ஒழிப்பதில் ஏராளமான பணிகளை இந்நிறுவனம் ஆற்றியுள்ளது" என்றார். சிரியாவில் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, சிரியாவில் ஏறத்தாழ 97 விழுக்காடு வேதிய ஆயுதங்கள் அழிக்கப்பட்டதை இந்நிறுவனம் 2014ம் ஆண்டு செப்டம்பர் வரைப் பார்வையிட்டுள்ளது.

வேதிய ஆயுத அச்சுறுத்தல் இல்லாத ஓர் உலகு அமைக்கப்படட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.