2016-04-26 12:54:00

மலேரியாவை ஒழிக்கும் இலக்கை எட்ட முடியும், WHO


ஏப்.26,2016. உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஐரோப்பிய பகுதியில், 2015ம் ஆண்டில், மலேரியாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற நிலையில், உலகில் இந்நோயை முற்றிலும் ஒழிக்கும் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.  

ஏப்ரல் 25, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மலேரியா நோய் தினத்தன்று புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள், குறைந்தது முப்பது நாடுகளில், மலேரியாவை ஒழிப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூட்டத்தில் உறுதி வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

WHO நிறுவனத்தின் ஐரோப்பிய பகுதியில், 1995ம் ஆண்டில், தொண்ணூறாயிரம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனால், கடந்த ஆண்டில், இப்பகுதியில் இது பூஜ்யமாக இருந்தது என்று கூறினார், அந்நிறுவன இயக்குனர் பேத்ரோ அல்போன்சோ (Pedro Alonso).

அர்ஜென்டீனா, கோஸ்டா ரிக்கா, ஈராக், மொரோக்கோ, ஓமன், பராகுவாய், இலங்கை, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய எட்டு நாடுகளிலும், 2014ம் ஆண்டில்,  மலேரியாவால் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறிய அல்போன்சோ அவர்கள், உலகில், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அறுபது விழுக்காடு குறைந்துள்ளது என்றும் கூறினார்.

அதேநேரம், உலகில் ஏறத்தாழ பாதிப்பேர், அதாவது 320 கோடிப் பேர் மலேரியாவில் தாக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும், 2015ம் ஆண்டில், 95 நாடுகளில் 21 கோடியே 40 இலட்சம் பேர் இந்நோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் என்றும், நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் கூறினார் அல்போன்சோ. 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.