2016-04-26 13:33:00

நேபாள மக்களில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிகின்றது


ஏப்.26,2016. ஓராண்டுக்கு முன்னர், கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அவர்கள் வாழ்வில், மேலும் நம்பிக்கையை ஊட்டுவதற்காக, அந்நாட்டில், காரித்தாஸ் நிறுவனத்தின் மூன்று நாள் கூட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்தார், அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட ஓராண்டு நினைவு நாளான ஏப்ரல் 25, இத்திங்களன்று, நேபாளத்திலிருந்து வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசி பேட்டியளித்த மணிலா கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

காத்மண்டுவில், காரித்தாஸ் அமைப்பு நடத்தும் மூன்று நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, நேபாளம் சென்றுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், இந்நாட்டில் பல்வேறு காரித்தாஸ் அமைப்புகள், நிவாரணப் பணிகளை ஆற்றி வருவதைப் பார்க்கும்போது, ஆறுதலாக இருக்கின்றது என்று கூறினார்.

நேபாளத்தில், ஏறத்தாழ நாற்பது இலட்சம் மக்கள், இன்னும், தற்காலிகக் குடியிருப்புக்களில் வாழ்கின்றனர் என்றும், மக்கள், அன்றாட வாழ்வுக்கே போராடினாலும், அவர்களில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிகின்றது என்றும், வத்திக்கான் வானொலியில் கூறினார் கர்தினால் தாக்லே.

நேபாளத்தில், 2015ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி, 7.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில், ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் இறந்தனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.