2016-04-26 08:28:00

இது இரக்கத்தின் காலம் : வெற்றி அடைவதில் வெவ்வேறு வழிகள்


கென்னத், ஏழு வயது சிறுவன். போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அவனது இரு கால்களும் முழு வளர்ச்சியடையவில்லை. விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கென்னத், மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் பல போட்டிகளில் வெற்றி பெற்று வந்தான்.

ஒருமுறை, அவன் வாழ்ந்த பகுதியில் ஒரு விளையாட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் நடந்த போட்டியில் கென்னத் முதலிடம் பெற்றான்.

இரண்டாவது போட்டி துவங்கியது. அப்போட்டியிலும் கென்னத் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தான். போட்டியின் இறுதி இலக்கை நெருங்கியதும், கென்னத் செய்தது, அங்கிருந்தோரை ஆச்சரியம் அடையச் செய்தது. இறுதி இலக்கை நெருங்க, நெருங்க கென்னத் மெதுவாக ஓடி, இலக்கைக் கடக்காமல் நின்றும் விட்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த ஜானி என்ற சிறுவன், இலக்கைக் கடந்து, அப்போட்டியில் வெற்றி பெற்றான்.

கென்னத் செய்ததைக் கண்ட அவனது தாய் அவனிடம், "ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று கேட்டார். அதற்கு, கென்னத், அம்மாவிடம், "அம்மா, நான் ஏற்கனவே ஒரு கோப்பை வாங்கிவிட்டேன். பாவம் ஜானி. அவன் இதுவரை கோப்பை வாங்கவில்லை. அதனால்தான்..." என்று சொல்லிவிட்டு, ஜானியின் வெற்றியில் பங்கேற்கச் சென்றான்.

வெற்றி அடைவதில் வெவ்வேறு வழிகள் உண்டு. அவற்றைக் கற்றுக்கொள்ள இரக்கத்தின் காலம் நல்ல தருணம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.