2016-04-26 14:04:00

90 வயதில் இந்தியக் குடிமகனான இஸ்பானிய அருள்பணியாளர்


ஏப்.26,2016. இந்தியக் குடிமகன் உரிமையைப் பெறுவதற்கு, கடந்த 38 ஆண்டுகளாக, விடாஉறுதியுடன் முயற்சித்து வந்த இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர் Gussi Frederick Sopena அவர்கள், தற்போது அவ்வுரிமையைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றி வரும், 90 வயது நிரம்பிய இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர் Sopena அவர்கள், இந்தியக் குடிமகனாவதற்கு அனுப்பிய விண்ணப்பம், பலமுறைப் புறக்கணிக்கப்பட்டு, தற்போது  ஏற்கப்பட்டு, இந்தியக் குடிமகனாகியுள்ளார்.

தனது அனுமதிச் சான்றிதழை மகிழ்வோடு காண்பித்த, அருள்பணியாளர் Sopena அவர்கள், தான் ஓர் இந்தியனாக, தனது கல்லறை, இந்தியாவில் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்வதாகவும், பாரத் மாத்தா கி ஜே எனவும் தெரிவித்துள்ளார்.

தனது 22வது வயதில், இயேசு சபைத் துறவியாக, 1947ம் ஆண்டு இந்தியா வந்த அருள்பணியாளர் Sopena அவர்கள், மும்பை, தானே, நாசிக், மற்றும் ராய்காட் மாவட்டங்களில், ஏழைகள் மற்றும் தேவையில் இருக்கும் மக்களுக்காக, கடந்த 68 ஆண்டுகளாக உழைத்து வருகிறார்.

ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.