2016-04-25 13:58:00

பூமி தின விழாவினரை வியப்பில் ஆழ்த்திய திருத்தந்தை


ஏப்.25,2016. இந்த உலகின் அனைத்து விதமான பாலைநிலங்களைக் காடுகளாக மாற்றும் நடவடிக்கையில் துணிச்சலுடன் ஈடுபடுமாறு, கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலுள்ள பொர்கேசே (Villa Borghese) பூங்காவில், பூமி தினத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை, இஞ்ஞாயிறு மாலை, முன்னறிவிப்பு ஏதுமின்றி அங்குச் சென்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களின் முயற்சிகளை ஊக்குவித்தார்.

முற்சார்பு எண்ணங்களும், அச்சங்களும் எப்பொழுதும் நிலவுவதால், நகரங்களிலும், எதிர்காலம் இல்லாத மக்களின் வாழ்விலும், பல பாலைநிலங்கள் உள்ளன என்று கூறிய திருத்தந்தை, இந்தப் பாலைநிலங்களுக்குப் பயப்படாமல் சென்று, அவற்றைக் காடுகளாக மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

காடுகளில் அபரிவிதமான வாழ்வு உள்ளது என்றும், பிறரின் வாழ்விலிருந்து தப்பிச்செல்வதற்குச் சோதனை ஏற்படுகின்றது என்றும், கிறிஸ்தவர்கள் பிறரிடமிருந்து  ஒருபோதும் விலகிச் செல்லக் கூடாது, அப்படி நடந்தால் மோதல்களைப் பார்க்காமல் இருக்கலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நல்ல சமாரியர் வாழ்வை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, இக்காலத்தில், பலர் தங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டுகொள்ளாமலும், புன்முறுவல் காட்டாமலும் செல்கின்றனர், கனிவும், சமூக நட்புணர்வும் சமூகத்தில் குறைந்து வருகின்றது என்றும் கூறினார்.

 “பூமி கிராமம்: நகரில் ஒன்றுசேர்ந்து வாழ்தல்” என்ற தலைப்பில், இத்தாலிய பூமி தின நடவடிக்கையாளர்களும், உரோம் Focolare இயக்கமும் சேர்ந்து, Villa Borgheseல் இஞ்ஞாயிறன்று பூமி தினத்தைச் சிறப்பித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.