2016-04-25 14:19:00

பிணையல் கைதிகளின் விடுதலைக்கு திருத்தந்தை செபம்


ஏப்.25,2016. இஞ்ஞாயிறு திருப்பலியின் இறுதியில், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவில் பிணையல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகள் விடுதலை செய்யப்படுமாறு, அழைப்பு விடுத்தார்.

இரக்கமுள்ள கடவுள், கடத்தல்காரர்களின் இதயங்களைத் தொடுவாராக என்றுரைத்த திருத்தந்தை, இஸ்பானிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட இளம் மறைசாட்சிகளையும் நினைவுகூர்ந்தார். 

இஸ்பானிய உள்நாட்டுப் போரில், மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட அருள்பணியாளர் Valentín Palencia Marquina மற்றும் அவருடன் சேர்ந்த நான்கு இளையோரும், கடந்த சனிக்கிழமையன்று, இஸ்பெயினின் Burgosல், முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சிரியாவில் நீண்ட காலமாக கடத்தல்காரர்களிடம் வைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை சகோதர ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகள் குறித்து நான் எப்பொழுதும் கவலையாக உள்ளேன், இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குழுக்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு இரக்கமுள்ள ஆண்டவரிடம் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை. 

மேலும், வளர் இளம் பருவத்தினரின் யூபிலியில் கலந்துகொள்வதற்காக இத்தாலி மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்திருக்கும் சிறுவர், சிறுமியரே, துணிச்சலுடன் உங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள், உங்களோடு ஆண்டவர் உடன்நடப்பாராக, எனக்காகச் செபிக்க மறக்காதீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.