2016-04-25 14:06:00

சிறுவர், சிறுமியரே இரக்கச் செயல்களை ஆற்றுங்கள்


ஏப்.25,2016. இயேசுவின் முகத்தை பிறரில் ஏற்பதற்கு, உடலளவிலான இரக்கச் செயல்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்லாயிரக்கணக்கான வளர் இளம் பருவத்தினரிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, உரோம் ஒலிம்பிக் அரங்கத்தில் யூபிலி விழாவைச் சிறப்பித்த அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினரிடம், காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு நாள் வாழ்விலும் ஆற்றப்படும் இரக்கச் செயல்கள், எளிய சாதாரண செய்கைகள், இவை, பல மனிதரில், ஏன் இளையோரில்கூட, இயேசுவின் முகத்தைக் காணச் செய்கின்றன என்றுரைத்தார் திருத்தந்தை.

உங்களைப் போன்ற இளையோர், பசியாலும் தாகத்தாலும் வாடுகின்றனர், புலம்பெயர்ந்தவர்களாக, நோயுற்றோராக, நம் உதவியை, நம் நட்பைத் தேடுபவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கம், மன்னிப்பின் தேவையை உணர்த்துகின்றது, மன்னிப்பது எளிதானதல்ல என்றும்,  சில நேரங்களில் குடும்பத்தில், பள்ளியில், பங்குத்தளத்தில், உடற்பயிற்சி மையத்தில், கேளிக்கை இடங்களில், யாராவது தவறு செய்யலாம் மற்றும் நாமும் புண்படுத்தப்படலாம், பிறர் மனத்தைப் புண்படச் செய்பவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

பழிவாங்கும் எண்ணம் பற்றி எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நம் ஆன்மாவைச் சாப்பிடும் புழு என்றும், இது நாம் மகிழ்வாய் இருப்பதற்கு அனுமதிக்காது  என்றும் கூறினார்.

இயேசுவோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், கிறிஸ்துவோடு கொள்ளும் உறவு, சப்தமாக ஒலிக்கும் தொலைபேசி மணி போன்றது, இயேசு நம் வாழ்வில் இல்லையென்றால், தொலைபேசித் தடத்தில் சிக்னல் கிடைக்காது என்பதை நினைவில் வைத்திருங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.