2016-04-25 13:57:00

இது இரக்கத்தின் காலம் : வாழ்வின் இறுதியில் உடன்வருவது எது?


ஒருநாள் ஒரு மனிதர் தான் இறந்துவிட்டதை உணர்ந்தபோது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவர் அருகில் வந்தார். வா மகனே... நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது என்றார். வியப்படைந்த அந்த மனிதர், "உடனடியாகவா?, இவ்வளவு விரைவாகவா?, என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" என்றார். மன்னித்துவிடு மகனே.. உன்னை அழைத்துச் செல்வதற்கான நேரம் இது என்றார் கடவுள். சரி, அந்தப் பெட்டியில் என்ன உள்ளது? என்றார் மனிதர். "உன்னுடைய உடைமைகள்...." என்று கடவுள் சொன்னதும், என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் இவையா?. இல்லை, அவை பூமியில் நீ வாழ்வதற்குத் தேவையான உடைமைகள் என்றார் கடவுள். "எனது நினைவுகளா? என்று அவர் கேட்டதும், நிச்சயமாக அவை உன்னுடையவை இல்லை. அவை காலத்தின் கோலம்" என்றார் கடவுள். "என்னுடைய திறமைகளா?" என்றதும், அவையும் கண்டிப்பாக உன்னுடையவை இல்லை, அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டவை, அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா? என்று அவர் கேட்டதும், "மன்னிக்கவும் மகனே, குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி என்றார் கடவுள். "அப்படியென்றால் என் மனைவி மற்றும் மக்கள் என்று அவர் கேட்க, "உன் மனைவியும் மக்களும் உனக்கு உரியவர்கள் இல்லை, அவர்கள் உன் இதயத்துடன் தொடர்புடையவை என்றார் கடவுள். என் உடல்? என்று அவர் கேட்க, அதுவும் உன்னுடையது கிடையாது, உடலும் குப்பையும் ஒன்று.." என்றார் கடவுள். என் ஆன்மா?" இல்லை, அது எனக்குரியது என்றார் கடவுள். மிகுந்த அச்சத்துடன் அந்த மனிதர், கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கித் திறந்தார். காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கண்ணில் நீர் வழியக் கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" என அவர் கேட்க, கடவுள் சொன்னார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் மகிழ்வாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே. உன் வாழ்க்கையை வாழ். மகிழ்ச்சியாக வாழ மறக்காதே. அது மட்டுமே நிரந்தரம். உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது. இது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.