2016-04-23 15:53:00

பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பது, 2030ன் இலக்குகளுக்கு உதவும்


ஏப்.23,2016. நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு நிதியுதவி அளிப்பது உட்பட, இது குறித்த அனைத்து முயற்சிகளும், வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்ற உதவும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2030ம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவது குறித்து, நியுயார்க்கில் நடைபெற்ற உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

பொறுப்பற்ற முறையில் நடத்தப்படும் நிதி சார்ந்த நடவடிக்கைகள், சமூக சமத்துவமின்மையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், 2030ம் ஆண்டின் இலக்குகளை அமல்படுத்துவதில், விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆயுத மோதல்களால் நிறைந்துள்ள இந்த உலகம், அந்த இலக்குகள் எட்டப்படுவதற்கு, மாபெரும் சவால்களாக உள்ளன என்றுரைத்த அவர், அனைத்து உரிமைகளையும், வளர்ச்சியையும், போர் புறக்கணிக்கின்றது என்றும் கூறினார்.

அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு காரணிகளாக அமைந்துள்ள, நல்ல நிர்வாகமும், அனைத்து அரசியல் கூறுகளும், 2030ம் ஆண்டின் இலக்குகள் வெற்றியடைவதற்கு இன்றியமையாதவை என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.